தீபாவளி பண்டிகையை ஒட்டி கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிய போது, 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் குழந்தை உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு சுற்றுலாத் தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. தற்போது ஊருடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வருகை. சுற்றுலாத் தலங்களில் சற்று அதிகரித்துள்ளது. 

இதற்கிடையில், தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்தினருடன் படையெடுத்தனர். அதன்படி, கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதிலும் வார விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும். 

Kodai Lake - dreamtrails

தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைவாக இருந்தது. ஆனால் நேற்று அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். 

இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் டைகர்சோலை வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். அதன்பிறகு ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் நகருக்குள் சென்றன. 

இந்தநிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, சொந்த ஊர் திரும்பியபோது, பள்ளத்தில் கார் கவிழ்ந்து, குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் தேனூரை சேர்ந்தவர் கோகுல். வழக்கறிஞரான இவர், தீபாவளி விடுமுறையையொட்டி தனது மனைவி நந்தினி, குழந்தை தன்யா, மாமியார் அழகுராணி மற்றும் நண்பர் கார்த்தி ஆகியோருடன் காரில், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றிருந்தார். இவர்கள் அனைவரும் சுற்றுலா பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று இரவு கொடைக்கானலில் இருந்து சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். 

image
 
கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக, பெரியகுளம் சாலையில் உள்ள வலைவில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கனமழை மற்றும் இரவு நேர மேகமூட்டத்தால் சாலை சரியாக தெரியாததால், கார் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது..

இதையடுத்து இந்த விபத்து குறித்து பெரியகுளம் தீயணைப்புத்துறை மற்றும் வடகரை காவல்துறையினருக்கு அங்கிருந்த மக்களால் தகவல் கொடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளன காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், இந்த விபத்தில் வழக்கறிஞர் கோகுலின் மனைவி நந்தினி, குழந்தை தன்யா மற்றும் மாமியார் அழகு ராணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கோகுல் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வடகரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.