தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடுவீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல பாதிப்புகளை ஏற்படுத்தியது.  இந்தியாவின் தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றே தீர்வு என்னும்  நிலையில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. மக்களும் தடுப்பூசியின் முக்கியத்துவத்தையும் அதை செலுத்திக்கொள்வதின் அவசியத்தை உணர்ந்து தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வீடுவீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

corono


சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பகுதியிலுள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தொடக்க பள்ளியிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இனிப்பு வழங்கி வரவேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 71 சதவீதம் பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 31 சதவீதம் பேருக்கு 2வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. முதல் தவணை 100 சதவீதம் பேருக்கு போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2 வது தவணை தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்த பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் 2வது தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. வழங்கியதும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.  கடந்த மாதங்களில் வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடபட்டது. தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 ஊராட்சிகளில், ஒரு ஊராட்சிக்கு 7 கிளை கிராமங்கள் என்ற வகையில் 70 முதல் 80 கிராமங்களுக்கும் மருத்துவர், செவிலியர் என மருத்துவ குழு வாகனத்தில் நேரடியாக அவர்கள் இல்லங்களுக்கு சென்று, தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்க உள்ளேன். அண்டை மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் 400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு தடுப்பு பணியிலும் சுகாதாரத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.