காம கொடூரத்தின் உச்சக்கட்டமாக 16 வயது சிறுமியை 3 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 600 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூர சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

பண்பாட்டிற்கு பெயர் போன தமிழ்நாட்டில் தான், அதுவும் கலாச்சார பழக்க வழக்கங்களைச் சொல்லித் தந்த நம்ம மதுரை மண்ணில் தான் இப்படி ஒரு காம வெறியாட்ட சம்பவம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோரை இழந்து தவித்து வந்த நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அவரது பெண் உறவினர் ஒருவர், அந்த 11 வயது சிறுமியை அழைத்துச் சென்று வளர்த்து வந்தார். 

ஆனால், சிறுமியை அழைத்துச் சென்ற அந்த பெண், ஒரு பாலியல் தொழிலாளி என்று கூறப்படுகிறது. 

அத்துடன், அந்த சிறுமி அடுத்த இரு ஆண்டுகளில் 13 வயதை அடைந்ததும், அந்த சிறுமி பெரிய மனுஷியாகி உள்ளார். பருவம் அடைந்த உள்ளார் அந்த சிறுமி. இதனையடுத்து, அந்த சிறுமியை வளர்த்து வந்த அந்த பெண், இந்த சிறுமியை 13 வயதிலேயே தான் செய்து வந்த, பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இப்படியாகக் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த 3 ஆண்டுகளில் மட்டும் சிறுமியின் பெண் உறவினரும், அவரது தோழிகளும், பாலியல் பெண் தரகரான அனார்கலி என்ற அனாரம்மாள், சுமதி, ஐஸ் சந்திரா என்ற சோரி சந்திரா, தங்கம் ஆகியோர் சேர்ந்து அந்த பகுதியைச் சேர்ந்த சரவண பிரபு என்பவரின் உதவியுடன் மதுரை மட்டுமில்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த நபர்களுக்கு அந்த சிறுமியைப் பலவந்தமாக அனுப்பி வைத்து பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தி உட்படுத்தி வந்திருக்கிறார்.

முக்கியமாக, அந்த சிறுமியை தினமும் ஏமாற்றி நாள்தோறும் ஒவ்வொரு நபரிடமும் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து வந்துள்ளனர். தற்போது, அந்த சிறுமிக்கு 16 வயது ஆகிறது.

இந்த நிலையில், மதுரை உத்தங்குடி அருகே உள்ள விஐபி நகர் பகுதியில் சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, துன்புறுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஆள் கடத்தல் விபசார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படை போலீசார், நேரில் சென்று சிறுமியை அதிரடியாக மீட்டனர். அப்போது, அங்கிருந்த சரவண பிரபு என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதன் பிறகு, மீட்கப்பட்ட சிறுமியிடம் நடத்திய விசாரணையில் தான், இந்த திடுக்கிடும் தகவல்கள் அனைத்தும் கிடைத்தன. 

இதனையடுத்து, சிறுமியை பாலியல் தொழிலிலுக்கு ஈடுபடுத்திய பெண் உறவினர், சுமதி, ஐஸ் சந்திரா என்ற சோரி சந்திரா உள்பட 5 பெண் தரகர்களைத் தேடி வந்த நிலையில், நேற்று காலை அவர்களையும் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தனிப்படை காவல் துறையினருக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “11 வயதிலிருந்து சிறுமியை பெண் உறவினர் உள்ளிட்ட ஐந்து பேரும் 600 க்கும் மேற்பட்ட நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதும், பணம் அதிகளவு பெற்றுக்கொண்டு, சிறுமிக்குப் பண ஆசை காட்டி ஏமாற்றிவந்ததும்” தெரிய வந்தது.

அந்த பெண் தரகர்களுக்கு வயது ஆகிவிட்டதால், இந்த சிறுமியை மாவட்டம் முழுவதிலும் அதிக பணத்துக்கு வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்ததும் தெரியவந்தது. 

மேலும், ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், பல்வேறு மாநிலத்தவர்கள், தொழிலதிபர்கள் என, பல தரப்பினரிடம் சிறுமியை வைத்து பாலியல் தொழிலில் அந்த கும்பல் ஈடுபட்டு வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. 
 
அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட சிறுமியை அங்குள்ள அரசு மருத்துவமனையில் போலீசார் சிகிச்சைக்கா அனுமதித்து உள்ளனர். அங்கு, சிறுமிக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவ பரிசோதனையின் போது, கடந்த 5 ஆண்டுகளாகச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதால், அந்த 16 வயது சிறுமியின் உடலானது 70 வயதான மூதாட்டி போன்று உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக, சிறுமி என்று பார்க்காமல் வலுக்கட்டாயமாக பாலியலில் உறவில் ஈடுபட்ட சுமார் 600 பேர் யார் என்றும், அவர்களின் பின்னணி என்ன என்ற விவரங்களையும் போலீசார் சேகரிக்கத் தொடங்கி உள்ளனர். பட்டியல் தயார் ஆனதும், அவர்களையும் போலீசார் கைது செய்யும் முயற்சியைத் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அத்துடன், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த தனிப்படை காவல் துறையினர், கைது செய்துள்ள 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனர். இதனால், கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.