அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ஆர்டிகிள் 15. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து தமிழில் யாரை வைத்து ரீமேக் பண்ணலாம் என்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. நேற்று ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆர்டிகிள் 15 ரீமேக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்ற ருசிகர செய்தியை தெரிவித்தனர் படக்குழுவினர். 

கனா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அருண்ராஜா யாரை வைத்து படம் இயக்குவார் என்ற ஆர்வத்தில் இருந்தனர் திரை விரும்பிகள். இந்நிலையில் இந்த அறிவிப்பு ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் வகையில் அமைந்துள்ளது. 

கடந்த 2012-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் ஹீரோவாக கால் பதித்தவர் உதயநிதி. அதைத்தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்தார். உதயநிதி நடிப்பில் வெளியான மனிதன் திரைப்படம் இவரது நடிப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியது. அதன் பிறகு நிமிர் படத்தில் அசத்தினார். மசாலா நிறைந்த கமர்ஷியல் படங்கள் செய்தாலும், நடிப்பிற்கு முக்கியதுவம் உள்ள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கிலும் உதயநிதி அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. உதயநிதி ஸ்டாலின் உடன் வேறு யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.