மத்திய அரசின் வழிகாட்டுதல்படி தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ``தமிழக அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100க்கும் கீழே உள்ளது" என்றார்.

மேலும் பேசிய அவர், ``தமிழக முதல்வர் இந்த மாத இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தர உள்ளார். அந்தக் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களையும் பல்வேறு புதிய அறிவிப்புகளும் வழங்க உள்ளார். அப்போது தூத்துக்குடி மாவட்ட மக்களின் கோரிக்கைகளை, முதல்வர் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

செப்.1-ம் தேதி முதல் திரையரங்குகளை திறப்பதற்கு ஆலோசிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி திரையரங்கு திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார். 

முன்னதாக இன்று மதியம் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்துக்கு அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 40 கோடி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதைத்தொடர்ந்து, சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30 அன்று வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் 8 அன்று படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் இன்னமும் இயங்காமல் உள்ளதால், இயல்பு நிலைமை திரும்பிய பிறகு திரையரங்கில் வெளியாவதாக இருந்தது. 

இந்நிலையில் சூரரைப் போற்று படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சூர்யா வெளியிட்டுள்ளார். சூரரைப் போற்று படம் அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக பெரிய பட்ஜெட் படம், அதுவும் பெரிய ஸ்டாரான சூர்யாவின் படம் நேரடி ஓடிடி ரிலீஸூக்கு வந்திருப்பது சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது/

சூரரைப் போற்று வியாபாரம் மூலம் கிடைத்த தொகையிலிருந்து ரூ. 5 கோடியை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் வழங்குவதாக சூர்யா அறிவித்துள்ளார்.

இந்நிலையில்தான் சூரரைப் போற்று படத்தை ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட அமேசான் பிரைம் நிறுவனம் ரூ. 40 கோடி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் குறித்த செய்திகளை வெளியிடும் லெட்ஸ் ஓடிடி தளம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. எனினும் பட வியாபாரம் குறித்த அதிகாரபூர்வத் தகவல் சூர்யா தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. விரைவில் அது வெளியாகும் எனக்கூறப்படுகிறது.