தூய்மையான இந்தியாவை கட்டமைப்பதற்காக, தூய்மையைப் பேணும் நகரங்கள், மாநிலங்கள், தலைநகரங்களைத் தோ்ந்தெடுத்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் விருதுகள் வழங்கி வருகிறது.

அந்தவகையில் இந்தியாவின் தூய்மை நகரங்களுக்கான பட்டியலில், தொடா்ந்து 4-ஆவது முறையாக, மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூா் நகரம் முதலிடம் பிடித்திருந்தது. குஜராத்தின் சூரத் நகரம் இரண்டாவது இடத்தையும், மகாராஷ்டிரத்தின் நவி மும்பை நகரம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

அந்த வகையில் 5-ஆவது ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, டெல்லியில் வியாழக்கிழமை அறிவித்தாா். அப்போது அவர்,

``மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்தியா முழுவதும் முக்கிய நகரங்களில் தூய்மையான நகரங்கள் கணக்கெடுப்பு நடந்தது. அதன்படி பொதுமக்கள், அவர்கள் வசிக்கும் நகரின் சுகாதாரம், கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது எந்தளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது எனக் கருத்துகளைப் பதிவு செய்து, அவர்களே அவர்கள் நகருக்கான மதிப்பெண்ணை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அத்தோடு மத்தியில் இருந்து வரும் சுகாதாரக் குழுப் பார்வையிடல், மாநகராட்சிகளில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தியது உள்ளிட்டவை அடிப்படையிலும் ஆண்டுதோறும் சுகாதார நகரங்கள் தரவரிசைப் பட்டியல் தேர்வு செய்யப்படுகிறது. 

இதற்காகப் பொதுமக்கள், தங்கள் செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் ss2020 voteForYourCity என்ற செயலியைத் தரவிறக்கம் செய்து, இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்றனர். அதுபோல், கூகுளில் swachh survekshan2020 டைப் செய்து, அதில் வரும் இணைப்பைத் தேர்வு செய்து பங்கேற்றனர். இந்தக் கணக்கெடுப்பு நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் நகரங்களைப் பிரித்து நடத்தப்பட்டது. அதில், 10 லட்சத்திற்கு மேலான நகரங்கள் பட்டியலில் தமிழகத்தில் மதுரை உள்பட சென்னை, கோவை போன்ற மாநகராட்சிகளும் இடம்பெற்றன.

தற்போது தூய்மை நகரங்கள் தேர்வு முடிந்து அதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மதுரை, நாடு முழுவதும் தூய்மையான நகரங்கள் பட்டியலில் 42-வது இடம் பிடித்துள்ளது. கோவை 40-வது இடமும், சென்னை 45-வது இடமும் பெற்றுள்ளது. சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களைக் காட்டிலும் வடமாநிலங்களில் உள்ள நகரங்கள் தூய்மையான நகரங்களாக, தரவரிசைப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் நாட்டிலேயே 42-வது தூய்மை நகரமாக மதுரை இடம்பெற்றுள்ளது" என்று குறிப்பிட்டதாக தெரிகிறது.

நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தூய்மையான நகரங்களின் பட்டியலில் இந்தூா் முதலிடத்தையும், சூரத், நவி மும்பை முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

கங்கை நதியை ஒட்டியுள்ள தூய்மையான சிறு நகரங்களில், பிரதமா் நரேந்திர மோடியின் தொகுதியான வாராணசி முதலிடம் பிடித்துள்ளது. கான்பூா், முங்கோ், பிரயாக்ராஜ், ஹரித்வாா் ஆகியவை அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. 100-க்கும் மேற்பட்ட நகா்ப்புற உள்ளாட்சிகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில், சத்தீஸ்கா் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை மகாராஷ்டிரமும், மூன்றாவது இடத்தை மத்திய பிரதேசமும் பிடித்துள்ளன.

100-க்கும் குறைவான நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைக் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ஜாா்க்கண்ட் முதலிடத்திலும், ஹரியாணா, உத்தரகண்ட், சிக்கிம், அஸ்ஸாம், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

10 லட்சத்துக்கும் குறைவாக மக்கள்தொகை உள்ள நகரங்களில், சத்தீஸ்கரின் அம்பிகாபூா் தூய்மையான நகரமாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் கா்நாடகத்தின் மைசூரும், மூன்றாவது இடத்தில் புதுடெல்லி மாநகராட்சி பகுதியும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த பெரிய நகரமாக, கிரேட்டா் ஹைதராபாத் தோ்ந்தெடுக்கப்பட்டது. ராணுவக் குடியிருப்புகளில், ஜலந்தா் ராணுவக் குடியிருப்பு முதலிடத்தையும், டெல்லி, மீரட் ராணுவக் குடியிருப்புகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன என்றாா் ஹா்தீப் சிங் புரி.

2020-ஆம் ஆண்டுக்கான தூய்மை நகரங்களைத் தோ்வு செய்வதற்காக, இதுவரை இல்லாத அளவில், 4,242 நகரங்கள், 62 ராணுவக் குடியிருப்புகள், கங்கை நதியை ஒட்டியுள்ள 92 சிறு நகரங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் 11 கோடி பேரும், பிரத்யேக செயலியில் 1.7 கோடி பேரும் கருத்துகளைத் தெரிவித்தனா். இதனால் 28 நாள்களில் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டது.