தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தவர். தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சீரான படைப்புகளை அளித்துள்ளார். 

தற்போது விஜய் சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர்ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் மாமனிதன். இளையராஜா - யுவன் சங்கர்ராஜா இணைந்து மாமனிதன் படத்துக்கு இசையமைத்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. 

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், நடிகர் சூர்யாவை பாராட்டி பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், திரைப்படம் வெளியீடு செய்த பிறகு நற்காரியங்களுக்கு நன்கொடை தருதல் அறிவோம். ஆனால், 5 கோடி நன்கொடை நன்மைகள், படம்வெளியீடு முன்னே முதல் முறையாக அறிகிறோம்
சூரரைபோற்று திரைப்படம் வெல்லட்டும். அடுத்த இரண்டு படங்கள் திரையரங்குகளில் ஆளட்டும் வாழ்த்துக்கள் சூர்யா என பதிவு செய்துள்ளார். 

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். 

ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

இன்று ஆகஸ்ட் 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாரும் எதிர்பாராத விதமாக சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என சூர்யா தெரிவித்தார். சூரரைப் போற்று ஓடிடி தளத்தில் வெளியாவது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் சூர்யா வெளியிட்டார். 

அதில், சூரரைப்‌ போற்று திரைப்பட வெளியீட்டுத் தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு, ஐந்து கோடி ரூபாய்‌ பகிர்ந்தளிக்க முடிவு செய்‌திருக்கிறேன். பொதுமக்களுக்கும்‌, திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும்‌, தன்னலம்‌ பாராமல்‌ கொரோனா யுத்த களத்தில் முன்நின்று பணியாற்றியவர்களுக்கும்‌. இந்த ஐந்து கோடி ரூபாய்‌ பகிர்ந்தளிக்கப்படும்‌.

உரியவர்களிடம்‌ ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள்‌ விரைவில்‌ அறிவிக்கப்படும்‌. உங்கள்‌ அனைவரின்‌ அன்பும்‌, ஆதரவும்‌, வாழ்த்தும்‌ தொடர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்‌. இந்த நெருக்கடி குழலை மனவுறுதியுடன்‌ எதிர்த்து மீண்டு எழுவோம்‌ என சூர்யா பேசியுள்ளார்.