கொரோனா வைரஸின் தாக்கம் உலகையே அச்சுறுத்தி வருகிறது.கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இன்னும் உலகின் முக்கால்வாசி இடங்களில் இந்த வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை.இந்த வைரஸிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் மக்களிடையே அச்சம் இருந்துகொண்டு தான் இருக்கிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டு அனைத்து தொழில்களும் முடங்கும் நிலை ஏற்பட்டது.கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து சில தொழில்களுக்கு அனுமதி அளித்து மெல்ல மக்களை இயல்பு நிலைக்கு திருப்பும் முயற்சியில் அரசு உள்ளது.இருந்தாலும் பலரது வாழ்வாதாரத்தை இந்த கொரோனா வைரஸ் தவிடுபொடியாக்கியுள்ளது.இதிலிருந்து மீண்டுவர எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது இன்னும் பல தொழில் துறையினருக்கு கேள்விக்குறியாக உள்ளது.

கொரோனவால் பெரிதும் பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று சினிமா மற்றும் சினிமா தியேட்டர்கள்.ஒரு சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கியது.இந்தியாவில் பல மாநிலங்களில் திரையரங்குகள் கடந்த அக்டோபர் 15 முதல் திறக்கப்பட்டு பாதி ரசிகர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட அனுமதி வழங்கவில்லை.

தற்போது தமிழகத்திலும் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து தீபாவளிக்கு ஓரிரு படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.