கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் க்ளாஸில் பங்கேற்பதற்காக ஸ்மார்ட் போன் இல்லை என்பதால் அதற்கு உதவி செய்யுங்கள் என அவரது அப்பா வேண்டுகோள் விடுத்திருந்தார். இது பற்றிய செய்தி சில மீடியாக்களில் வெளிவந்திருந்தது. பலரும் அந்தப் பெண்ணுக்கு உதவுவதாக முன்வந்தனர். மேலும் மூன்று பெண் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாக ஒரு சிலர் தெரிவித்தனர். இப்படியிருக்க அந்த பெண்ணுக்கு நடிகை டாப்ஸி ஒரு ஐபோன் வாங்கி தந்து உதவி செய்துள்ளார் நடிகை டாப்ஸி. 

2010-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் டாப்ஸி. அதைத்தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான கேம்-ஓவர் திரைப்படம் டாப்ஸிக்கு பெரும் பெயரை சம்பாதித்து தந்தது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் பூமி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருக்கிறது.  

அந்த மாணவியை பற்றிய செய்தி அறிந்ததும் உடனே அதை அவர் அனுப்பியிருக்கிறார். அந்த பெண் பி. யு. சி. தேர்வில் 94 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார் என்ற நிலையில், அவர் மருத்துவம் படிக்க உள்ளாராம். 

டாப்ஸி அனுப்பிய ஐபோன் நேற்று அந்த மாணவியை சென்று அடைந்திருக்கிறது. இது பற்றி அந்தப் பெண் பேசும் போது டாப்ஸி மேடம் அனுப்பிய போன் எனக்கு கிடைத்தது. அது ஐபோன் என்னால் நம்பவே முடியவில்லை. இது என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. நான் கடினமாக உழைத்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முயற்சிப்பேன். உங்களது ஆசிர்வாதம் எனக்கு தேவை என அந்த பெண் கூறியிருந்தார். அவரை படிக்க வைப்பதற்காக அவரது அப்பா வீட்டில் இருக்கும் தங்க நகைகள் போன்றவற்றை ஏற்கனவே விற்று விட்டார். அதிக அளவில் கடன் வாங்கியிருக்கிறார். 

இதுகுறித்து பதிவு செய்த டாப்ஸி, அதிக அளவு பெண்கள் படிக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். நமக்கு அதிக மருத்துவர்கள் தேவை. நமது நாட்டிற்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய ஒரு சிறிய பங்களிப்பு இது" என தெரிவித்திருக்கிறார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க அதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போடப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் அதிக பாதிப்புகளை சந்தித்திருக்கிறார்கள். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பல மாதங்களாகவே மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் எப்போது சகஜ நிலை திரும்பி பள்ளிகள் திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. 

அனைத்து பள்ளிகளும் தற்போது ஆன்லைனில் பாடங்கள் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக ஏழை மாணவர்கள் தான் அதிக அளவு பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள். ஆன்லைன் கிளாசில் பங்கேற்க ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப் உள்ளிட்டவை இல்லாத வீடுகளில் குழந்தைகள் கல்வி கற்க கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டாப்ஸி போல் இறங்கி வந்து உதவவில்லை என்றாலும், பிரபலங்கள் இதுகுறித்து குரல் எழுப்ப வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.