ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் என்பது விதி. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் கல்விக் கொள்கை மாற்றம் பெறவுள்ளது. இதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அமைத்தது. இது தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி சமர்ப்பித்தது. இந்த வரைவு திட்டத்தின் மீதான கருத்துக்கேட்பு ஜூன் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஜூலை மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டது. இதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களுக்கு தமிழகத்தில் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அதன்படி ஓரிரு திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இதையடுத்து திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தை மத்திய அரசு இணையத்தளத்தில் வெளியிட்டது.

அதைத் தொடர்ந்து, அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். அந்தவகையில்,

தி.க தலைவர் கி.வீரமணி, `மிகமுக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கும்போது மாநிலஅரசின் கருத்தை கேட்காமல் ஒருசார்பாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. மறைமுகமாக சம்ஸ்கிருதத்தை திணிக்கவும் முயற்சி நடக்கிறது. இக்கொள்கையை தமிழக அரசு ஏற்கக்கூடாது' என சொல்லியிருந்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, `அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான கல்விவழங்க எவ்வித வாய்ப்புகளும் இக்கொள்கையில் இல்லை. எனவே, இதை உடனே நிறைவேற்றாமல் அனைத்து மாநில அரசுகளுடன் விவாதித்து பிறகு அமல்படுத்த வேண்டும்' என்று சொல்லியிருந்தார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, `கரோனா துயர சூழலைபயன்படுத்திக்கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் நீண்டகால திட்டங்களுக்கு மத்திய பாஜகஅரசு, செயல்வடிவம் கொடுக்கிறது. ஒரே நாடு, ஒரே கல்வி முறைஎன்ற கோட்பாட்டை செயல்படுத்தி, பன்முகத் தன்மை, கூட்டாட்சிக் கோட்பாடுகளை சீர்குலைக்கும் புதிய கல்விக் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், `3-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தி ஏற்கெனவே படிப்பவர்களையும் இடைநிறுத்தம் செய்யவே இக்கொள்கை வழிவகுக்கும். கல்வியை காவிமயமாக்கும் நோக்குடன் கொண்டுவரப்படும் இக்கொள்கையை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழகத்தின் ஒன்றுபட்ட கருத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்' என்றும் கூறியிருந்தனர்.

மேலும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, `கல்லூரி, பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். உயர்கல்வி ஒழுங்குமுறைகள் தனியாருக்கு சாதகமாக உள்ளதால், உயர்கல்வி தனியாரிடம் சென்றுவிடுமோ என சந்தேகம் ஏற்படுகிறது. இக்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். கோத்தாரி கமிஷனின் பரிந்துரைகளை சேர்க்க வேண்டும்' என்றும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், `புதிய கல்விக் கொள்கையை நாடாளுமன்றத்தில் வைத்து முறைப்படி விவாதித்து, உரிய திருத்தங்கள் செய்து செயல்படுத்துவதற்கு பதிலாக, கொரோனா பேரிடர் காலத்தில் அவசர கதியில் செயல்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது ஏற்புடையது அல்ல' என்றும் கூறியிருந்தார்கள்.

தமிழகத்தில் இப்படி எதிர்ப்புகள் வலுத்துவந்த நிலையில், புதிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மேலும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பெயரும் 'மத்திய கல்வி அமைச்சகம்' என்று மாற்றப்பட்டுள்ளது.

இதுதவிர, 5-ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், கல்லூரிகளில் சேருவதற்கு தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வு, எம்.ஃபில். படிப்பு நிறுத்தம், தொழிற்கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் உள்ளிட்ட அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 4:30 மணிக்கு நாட்டு உரையாற்றுகிறார். இந்த உரையாடலில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும், புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.