கொரோனா பேரிடரிலும்கூட, ஒரு சில திருநாள்களை இந்தியா போன்ற மதநல்லிணக்க நாள்களில் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது வியப்பூட்டும் விஷயம்தான். அப்படித்தான், நாளை ஆகஸ்ட் 1 -ம் தேதி மனிதநேயத் திருநாளாம் பக்ரீத்  திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில், பக்ரீத் திருநாளுக்காக, `அன்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு கிடையாது' என்று அறிவிப்பேவும் வெளியிடப்பட்டுவிட்டது.

இருப்பினும், இப்படியான கொண்டாட்டங்கள், கொரோனா பரவலை அதிகரித்துவிடுமோ என்ற பயம் மருத்துவ வல்லுநர்கள் மத்தியில் இருந்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்தியாவில் ஏற்கெனவே ஒவ்வொருநாளும் 50,000 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதால், இந்த அச்சம் மிக அதிகமாக இருக்கிறது.

இந்த பயத்தினை போக்கவும், மக்கள் பாதுகாப்பாக பக்ரீத்தை கொண்டாடவும், நிறைய மருத்துவ வல்லுநர்களும் - மக்கள் பணியாற்றும் அரசு மருத்துவர்களும் அறிவுறை கூறி வருகின்றனர். அந்தவகையில், பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்சிங் மூலம் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மாநில உள்துறை மந்திரி அனில்தேஷ்முக், சிறுபான்மை விவகாரத்துறை மந்திரி நவாப் மாலிக் மற்றும் முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

அப்போது அவர், ``கடந்த 4 மாதங்களாக நாம் அனைத்து மத பண்டிகைகளையும் கட்டுப்பாடான முறையில் கொண்டாடி வருகிறோம். அதேபோல் வரவிருக்கும் பக்ரீத் பண்டிகையையும் எளிமையாக கொண்டாட வேண்டும். கொரோனா தொற்று பெரிய சவாலாக இருக்கிறது. பண்டிகையின் போது கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த தொற்றுநோய் நெருக்கடியை திறம்பட சமாளித்து, அடுத்த ஆண்டு அனைத்து பண்டிகைகளையும் பெரிய அளவில் கொண்டாடுவோம். எனவே பக்ரீத் பண்டிகைக்காக ஆடுகளை விற்பனை செய்வதற்கு இடம் ஒதுக்க வேண்டும் என வற்புறுத்தக்கூடாது" என்று கூறியிருக்கிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஏற்ப, பாதுகாப்பாக பக்ரீத் கொண்டாடுவது எப்படி என்ற வழிமுறைகளை இந்தியாவின் சில மாவட்ட அதிகாரிகள் தெரிவித்து வருகிறார்கள். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில முக்கியமான அம்சங்கள் இங்கே...

``* தொழுகை, மசூதிகளுக்குள் மட்டும்தான் செய்யப்பட வேண்டும். வீட்டில் விழா போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டாம் - அப்படியே செய்யப்பட்டாலும், ஐந்து பேர்தான் அப்போது கலந்து கொள்ள வேண்டும். வியாபாரிகள் தொடங்கி, பொதுமக்கள்வரை யாரெல்லாம் பொது இடங்களில் கலந்து கொள்கிறார்களோ, அவர்கள் அனைவருக்குமே, உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

* முன் அறிமுகமில்லாத நபர்களை, மசூதிகளுக்குள் அனுமதிக்கக்கூடாது. அதிகபட்சமாக, தொழுகை செய்ய, நூறு பேர் வரை மசூதிகள் அனுமதிக்கலாம். அனைவருமே சமூக இடைவெளி விட்டுதான் நிற்க வேண்டும் - தொழுகை செய்ய வேண்டும். 

* அசைவ உணவுகளை வீட்டுக்கே சென்று விற்பனை செய்யும்போது, அரசால் தரப்பட்டிருக்கும் பாதுகாப்பு விஷயங்கள் அடங்கிய துண்டு பேப்பர் விநியோகிக்கப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும், மாஸ்க் அணியப்பட்டிருக்க வேண்டும். அனைவருக்கும் உகந்த வழியில், சானிடைசர் பயன்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில், அசைவ உணவுகள் விநியோகிக்க அனுமதிக்கப்பட மாட்டாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருக்கும் பகுதிகளில், கொண்டாட்டங்களுக்கு தடை. 

* எந்த இடமாக இருந்தாலும், அங்கிருக்கும் அசைவ உணவை விநியோகஸ்தர்கள் மூலம், யார் யாருக்கு எவ்வளவு அசைவ இறைச்சிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது முறையாக பதிவு செய்யப்படவேண்டும்"


மொத்தத்தில், பாதுகாப்பாக பக்ரீத் கொண்டாடுவோம் சகோதரர்களே!

-ஜெ.நிவேதா