கேரளத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து மரணம் ஏற்படுத்திய வழக்கில், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகியோரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
பெரம்பலூர் தொகுதியில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ராஜ்குமார். பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டுக்குக் கேரள மாநிலம் பீர்மேடு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2012-ஆம் ஆண்டு வீட்டு வேலைக்கான பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராஜ்குமாரின் நண்பர் ஜெய்சங்கர், சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் மருத்துவமனையில் மகள் சத்யா சுயநினைவு இல்லாமல் இருப்பதைக் கண்டு கதறி அழுதனர். பின்னர் தொடர் சிகிச்சைக்காகக் கேரளாவுக்கு அழைத்துச் சென்றபோது, மகளின் உடல் மோசமானதால், தேனி அரசு மருத்துவமனையில் ஜூலை 4 ஆம் தேதி சேர்த்தனர்.  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சத்யா சிகிச்சை பலனின்றி ஜூலை 6 ஆம் தேதி  உயிரிழந்தார்.

பின்னர் கேரளாவுக்குக் கொண்டு சென்று மகளின் உடலை அடக்கம் செய்யும் போது, அவரது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர் ஜூலை 7 ஆம் தேதி பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சத்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், மறுபிரேத பரிசோதனை நடத்தும்படி பீர்மேடு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அங்கு வழக்குப்பதிவு செய்து, மறு பிரேதப் பரிசோதனையும் நடைபெற்றது. 

இந்த நிலையில் சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. 

பிரேதப் பரிசோதனை அடிப்படையில் சந்தேக மரணம் வழக்கை, ஆட்களைக் கடத்தல் (366 ஏ), கற்பழிப்பு (376) மற்றும் கொலை (302) ஆகிய பிரிவுகளின் கீழ் மாற்றியமைத்துப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், அரிகிருஷ்ணன், பன்னீர்செல்வம் ஆகியோர் மீது ஆள்கடத்தல், கற்பழிப்பு, கொலை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பெரம்பலூர் நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்த வழக்கு பின்னர் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட பன்னீர்செல்வம் இறந்து விட்டதால், மற்ற ஆறு பேர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 42 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். மற்ற நான்கு பேர் மீதான குற்றச்சாட்டு முழுமையாக நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரும், அவரது நண்பர் ஜெய்சங்கரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர், ராஜ்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். 

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், இருவர் மீதான குற்றச்சாட்டுக்களைக் காவல் துறையினர் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.  

-பெ.மதலை ஆரோன்