இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாகக் கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் கடந்த ஆண்டு சூட்டப்பட்டது.

தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்குப் பெயர் மாற்றம் செய்து புதிய உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்குப் பேரறிஞர் அண்ணா பெயரும், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரும் சூட்டப்பட்டுள்ளது. மேலும் சென்னை சிஎம்பிடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்டது.

மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்த ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையை நினைவுகூரும் வகையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு முனையம்‌ என்று பெயரிட்டதைப்‌ போல்‌, ஆலந்தூர்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அறிஞர்‌ அண்ணா ஆலந்தூர்‌ மெட்ரோ என்றும், சென்னை சென்ட்ரல்‌ ரயில்‌ நிலையத்திற்கு 'புரட்சித்‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ மத்திய ரயில்‌ நிலையம்‌' என்று பெயர்‌ வைத்ததைப்‌ போல சென்ட்ரல்‌ மெட்ரோ ரயில் நிலையத்திற்குப் புரட்சி‌ தலைவர்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.இராமச்சந்திரன்‌ சென்ட்ரல்‌ மெட்ரோ என்றும்‌, மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ ஆசியாவில்‌ மிகப்பெரிய பேருந்து முனையமான சென்னை புறநகர்‌ பேருந்து நிலையத்தையும்‌, அங்கு அமைந்துள்ள மெட்ரோ நிலையத்தையும்‌ திறந்து வைத்ததாலும்‌, சென்னை மெட்ரோ இரயில்‌ திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திட எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை நினைவு கூறும்‌ வகையில்‌, புறநகர்‌ பேருந்து நிலைய மெட்ரோ நிலையத்தைப் புரட்சித்‌ தலைவி டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா மெட்ரோ என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
விடுதலை போராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களைப் பேருந்துகள் மற்றும் சில மாவட்டங்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல், தற்போது மெட்ரோ ரயில் நிலையங்களுக்குப் பெயர் சூட்டியுள்ளார் முதல்வர் பழனிச்சாமி.

-பெ.மதலை ஆரோன்