முதலிரவு இப்போது வேண்டாம் என்று  2 மாதமாகத் தள்ளிப்போட்ட கணவன், அமெரிக்காவில் உள்ள தன்னுடைய “ஓரினச்சேர்க்கை நண்பனுடனும் மனைவியாக இருக்க வேண்டும்” என்று மனைவியை மிரட்டிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30 வயது இளைஞர் பாஸ்கர், அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அவரது சொந்த ஊரில் பாஸ்கரின் பெற்றோர் திருமணத்திற்குப் பெண் பார்த்துள்ளனர். 

அதன்படி, குண்டூரைச் சேர்ந்த 25 வயது பெண்ணை தேர்வு செய்து நிச்சயம் செய்து, முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்திற்கு 70 சவரன் தங்க நகைகளும், 50 லட்சம் ரூபாய் பணமும், பெண் வீட்டார் சீதனமாகக் கொடுத்துள்ளனர்.

திருமணத்தின் முதல் நாள் இரவு பெண் வீட்டு சார்பில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அமெரிக்கா மாப்பிள்ளை என்பதால், பெண் வீட்டார் முதலிரவு ஏற்பாட்டை தடபுடலாகச் செய்திருந்தனர். அந்த பெண்ணும், பல கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார்.

ஆனால், முதல் இரவு அன்று தனக்கு உடல் நிலை சரியில்லை என்று காரணத்தைக் கூறி, அன்றை கொண்டாட்டத்தைத் தள்ளிப் போட்டுள்ளார். இதனால், அந்த புது பெண்ணிற்கு முதலிரவு ஏமாற்றமான இரவாகவே மாறிப்போனது.

மேலும், முதல் இரவைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு இரவும் வெவ்வேறு காரணங்களைக் கூறி, குறட்டை விட்டுத் தூங்கி உள்ளார். இதனால், அந்த பெண்ணிற்குப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.

இப்படியாகத் திருமணம் ஆகி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில், இது வரை அவர்களுக்குள் தாம்பத்தியம் நடைபெறவே இல்லை. அத்துடன், இரவு வரும் போதெல்லாம் மாப்பிள்ளை பாஸ்கர் தினமும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி, தவிர்த்து வந்ததும், அந்த பெண்ணிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால், சந்தேகம் அடைந்த அந்த புதுமண பெண், தன் தோழிகள் மூலம் இது குறித்து ஆலோசித்துள்ளார். 

அதன் பின்னர், தன் தோழிகள் மூலமாகவே, இந்த விசயத்தை தன் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். இதனால், கொஞ்சம் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், இதனை மாப்பிள்ளையின் பெற்றோரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதன் காரணமாக, இரு வீட்டார் சொந்த பந்தங்கள் சூழ பஞ்சாயத்து நடந்துள்ளது. அதில், “பெண் பிடிக்கவில்லையா?” என்று அவரது உறவினர்கள் சற்று அதட்டலாகக் கேட்டுள்ளனர். 

அதற்கு, மாப்பிள்ளை பாஸ்கர் கூறிய காரணம் தான் அங்கு இருந்தவர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது. அதாவது, “அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் நான் கடந்த 4 ஆண்டுகளாக ஓரினச்சேர்க்கை ஏற்பட்டு, நல்ல புரிதலுடன் வாழ்க்கை நடத்தி வருகிறேன்” என்று கூறி உள்ளார். இதனைக் கேட்ட அனைவரின் தலையிலும் இடி விழுந்தது போல் இருந்துள்ளது.

மேலும், “ஓரினச்சேர்க்கை காரணமாக, எனக்குப் பெண்கள் மீதான மோகம் துளியும் இல்லை” என்று கூறி மேலும் அதிர வைத்துள்ளார். இதனைக் கேட்ட புதுப்பெண் மற்றும் இரு வீட்டார் பெற்றோரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால், வெறுத்துப்போன புதுப்பெண் தன் பெற்றோரிடம் அவர் வீட்டிற்கே சென்றுவிட்டார். அதன் தொடர்ச்சியாக அடுத்த சில நாட்களில் மீண்டும் மற்றொரு சமாதானப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. 

அப்போது, அந்த பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என்று பாஸ்கர் கூற, அந்த பெண்ணை அனுப்பி உள்ளனர். அப்போது, அந்த பெண்ணிடம் தனியாகப் பேசிய பாஸ்கர், “என்னுடன் நீ வாழ வேண்டும் என்று விரும்பினால், நான் உன்னை அமெரிக்கா அழைத்துச் செல்கிறேன். ஆனால், அமெரிக்கா வந்த பிறகு அங்கு என்னுடன் குடும்பம் நடத்தி வரும் எனது ஆண் நண்பருக்கும் நீ மனைவியாக இருக்க வேண்டும்” என்றும் நிபந்தனை விதித்து உள்ளார். 

இதனைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனது பெற்றோருடன் குண்டூர் புறநகர் காவல் நிலையத்திற்குச் சென்று திருமணம் செய்து மோசடி செய்துள்ளதாக பாஸ்கர் மற்றும் அவரது பெற்றோர் மீது புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.