மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி மனு கொடுக்கச் சென்றவரிடம் போலீசார் ஒருவர் லஞ்சம் கேட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி தந்தை - மகன் லாக்கப் டெத் விவகாரம், தென்காசி காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த விவகாரம் என்று, தமிழ்நாட்டில் போலீசாரின் அத்து மீறல்கள் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இப்படிப்பட்ட சூழலில், போலீசாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு, அதை நீக்கும் முயற்சியில் ஒட்டுமொத்த தமிழக போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட இந்த சூழலில் தான், ஈரோடு அருகே மனைவியை சேர்த்து வைக்கக் கோரி மனு கொடுக்கச் சென்றவரிடம், போலீசார் ஒருவர் லஞ்சம் கேட்டு சம்பவம், வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் என்பவரின் மகள் ஜெயந்தியும், சிவராஜின் உறவினரான பழனிச்சாமியின் மகன் பாபு என்பவரும்  ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இந்த காதலுக்கு எப்போதும் போலவே, பெண்ணின் அப்பா சிவராஜ் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், காதலன் பாபு வீட்டில் எந்த வித எதிர்ப்பும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

பெண் வீட்டார் எதிர்ப்பு காரணமாக, கடந்த மாதம் ஜூன் 30 ஆம் தேதி காதலர்கள் இருவரும், வீட்டை விட்டு வெளியேறி, அந்த பகுதியில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். 

இதனையடுத்து, இருவரையும் பெண் வீட்டார் அந்த பகுதி முழுவதும் தேடி உள்ளனர். அப்போது, அவர்கள் இருவரும் அவர்கள் கண்ணில் பட்டுள்ளனர்.

அப்போது, “என் மகளை நான் இன்னும் படிக்க வைக்க வேண்டும்” என்று கூறி, அந்த பெண்ணின் தந்தை சிவராஜ், மகள் ஜெயந்தியை தன்னுடனே அழைத்துச் சென்று விட்டார். 

இதனையடுத்து, மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி, காஞ்சி கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேலுவை, பாபு நேரில் பார்த்து மனு அளித்துள்ளார்.

ஆனால், “உன்னுடைய காதல் வழக்கு, இந்த காவல் நிலைய எல்லைக்குள் வராது என்றும், ஆனாலும் தெரிந்த உதவி ஆய்வாளரை வைத்து விசாரிக்கிறேன்” என்றும், உதவி ஆய்வாளர் தங்கவேலு கூறியுள்ளார்.  

இதனையடுத்து, காவல் நிலைய புகார் ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு புறம் வழக்கறிஞர் ஒருவர் மூலமாக காதலன் பாபு, எப்படியோ தன் மனைவியுடன் சேர்ந்து வாழத் தொடங்கினார். இதனையடுத்து, கணவன் பாபு - மனைவி ஜெயந்தியுடன் குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, காஞ்சி கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேலு, “நான் சொல்லித் தான் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் விசாரித்து, உன்னை உன் மனைவியோடு சேர்த்து வைத்தனர் என்றும், அதற்காக 5 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும்” என்றும், பாபுவிடம் பணம் கேட்டு போனில் தொலை கொடுத்து வந்துள்ளார்.

இந்த ஆடியோவை பாபு, தன் செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டார். ஆனால், காஞ்சி கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தங்கவேலு, தொடர்ந்து பணம் கேட்டு பாபுவை தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால், ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த பாபு, காவல் உதவி ஆய்வாளர் தங்கவேலு, பணம் கேட்டு தொடர்ச்சியாகத் தொல்லை கொடுக்கும் ஆடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

இதனையடுத்து, அந்த ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. அந்த பகுதி முழுவதும் இந்த ஆடியோ பரவியது. குறிப்பாக, இந்த ஆடியோ ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கவனத்திற்குச் சென்றது. இதனை முழுவதும் கேட்ட அவர், அதிரடியாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார்.

அதன்படி,  “உதவி ஆய்வாளர் தங்கவேலு, சென்னிமலை காவல் உதவி ஆய்வாளராக பணியிட மாற்றம்” செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம், தமிழக காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.