எகிப்து நாட்டில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பொது ஒழுக்கத்தை சீர்குலைத்ததாகக் கூறி 5 பெண்களுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டின் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

டிக்டாக் கடந்த மாதம் இந்தியாவில் தடை செய்வதற்கு முன்பு வரை, பலரது வாழ்க்கையையும் அது சீரழித்துள்ளது என்று சொன்னாலும், அது தகும். அந்த அளவுக்குப் பெண்கள் பலரும் எல்லை மீறி கவர்ச்சி காட்டினார். 

சிலர், டிக்டாக் மூலம் நட்பு பாராட்டி, அது காதலாகவும், கள்ளக் காதலாகவும் மாறி வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த சம்பங்களும், அதனால் அடிதடி, கொலை, காவல் நிலைய வழக்கு என்று பல்வேறு சர்ச்சைகளை டிக்டாக் வீடியோவால் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருந்தது. ஆனால், சமூகத்தில் பொது ஒழுக்கத்தை சீர்குலைத்ததாகக் கூறி யாரும் இந்தியாவில் கைது செய்யப்படவில்லை.

இந்தியாவில் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் தடை செய்யப்பட்ட நிலையில், பல குடும்பங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், அந்த பழைய தாக்கம் இன்னும் நம்மை விட்டுப் பரிந்து செல்ல வில்லை.

இந்நிலையில், எகிப்தைச் சேர்ந்த ஹனின் கொசாம், மவ்டா ஆல் ஆதாம் உள்ளிட்ட 5 பேர், தங்களது டிக்டாக் கணக்கில் வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோக்கள், அந்நாட்டில் பெரும் சர்சை ஏற்படுத்தியது.

குறிப்பாக, “என்னுடன் இணைந்து பணியாற்றினால், பணம் சம்பாதிக்கலாம்” என்பது போன்று, ஹனின் கொசாம் கடந்த ஏப்ரல் மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

இதே போல், மில்லியன் கணக்கில் உள்ள தன்னுடைய பாலோவர்ஸ்களிடையே, ஹனின் கொசாம் வேறொரு வீடியோவையும் வெளியிட்டார். இந்த விடியோக்கள் எல்லாம் அந்நாட்டின் கலாச்சாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனையடுத்து, அவர்களது வீடியோக்கள் வைரலான நிலையில், “பொது ஒழுக்கத்தை சீர்குலைத்ததாக” கூறி சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்ட 5 பெண்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், அந்த 5 பெண்களுக்கும் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. 

அத்துடன், சிறைத் தண்டனை உடன், 5 பேரும் தலா 3 லட்சம் எகிப்தின் பவுண்ட்ஸ்கள் அபராதம் கட்ட வேண்டும் என்றும், அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, அந்த 5 பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெண்கள் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டத்திற்கு, அந்நாட்டில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அந்நாட்டுச் செய்தி ஊடகத்தில் பேசிய மனித உரிமைகள் ஆணைய வழக்கறிஞர் ஒருவர், “இதுவும் பெண்களுக்கு எதிரான வன்முறை” தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்நாட்டில் குறிப்பிட்ட மக்கள் குறி வைத்துத் தாக்கப்படுகின்றார்கள்” என்றும், தனது கண்டனத்தை அவர் பதிவு செய்தார்.

“அதிவேகமாக உயர்ந்து வரம் தகவல் தொடர்பு தொழில்நுட்பமானது, பழமைவாத மத சமூகத்துடன் எப்படி ஒத்துப்போகவில்லை என்பதற்கு, இந்த கைதுகள் சிறந்த உதாரணம்” என்றும் அவர் கூறினார்.

எனினும், எகிப்தில் இணைய உலகம், அந்நாட்டின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக, அந்நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதப்படும் சமூக வலைத்தளங்களை முற்றிலும் தடுக்கும் வகையில், அந்நாட்டின் செயல்பாடுகள் உள்ளன.

அதே போல், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலோவர்ஸ்கள் இருந்தாலே, அவர்களைக் கண்காணிக்கச் செய்யும், செயல் திட்டங்களும் அந்நாட்டில் நடைமுறையில் உள்ளது. இதனால், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமூக வலைத்தள சுதந்திரம், அந்நாட்டில் இல்லை என்றே கூறலாம்.

இதனிடையே, டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு பொது ஒழுக்கத்தை சீர்குலைத்ததாகக் கூறி 5 பெண்களுக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம்,  எகிப்து நாட்டில் தற்போது பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.