சச்சின் டெண்டுல்கரின் மனைவி, நடிகை நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலங்களிடம் கட்டுமான நிறுவனம் ஒன்று மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் விளம்பரங்களில் வரும் நடிகர் நடிகைகளை நம்பி தான், பொதுமக்கள் பலரும் குறிப்பிட்ட விளம்பர பொருட்களைக் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால், அப்படிப்பட்ட விளம்பரங்களை நம்பி, இந்தியாவின் மிகப் பெரிய பிரபலங்களே ஏமார்ந்திருக்கிறார்கள் அல்லது ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்கிற போது, அது ஒரு வித அச்சத்தையும், அதிர்ச்சியையும் பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது என்று சொன்னால், அது தகும்.

அதன்படி, “ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் நீர் நிலைகளை ஒட்டி தனி வீடுகள் கட்டலாம். பல கோடி மதிப்புள்ள வீட்டுமனைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம்” என அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமான வகையில் 'ஆதித்யா நில விற்பனை நிறுவனம்' விளம்பரம் செய்து வந்தது.

இந்த நிறுவனம், ஐதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆதித்யா நில விற்பனை நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் கோட்டா ரெட்டிக்கும், தொழில் பாட்னரும் அவரது உறவினருமான சுதிர் ரெட்டிக்கும் இடையே தற்போது மிகப் பெரிய மோதம் வெடித்துள்ளது. இந்த மோதலே காரணமாக, தற்போது பல்வேறு முறைகேடுகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதாவது, ஆதித்யா நில விற்பனை நிறுவனம் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்த நிலங்கள் அனைத்தும், நீர் நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்கள் என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்ட இந்த நிலங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டதைப் பார்த்த உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகள், உடனே இந்த கட்டுமான பணிகளை நிறுத்தச் சொல்லி, ஆதித்யா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக ஆதித்யா நிறுவனத்தின் இரு உரிமையாளர்கள் இடையே மோதல் போக்கு தொடங்கி உள்ளது. 

குறிப்பாக, விவசாயிகளிடம் இருந்து ஒரு ஏக்கர் நிலத்தை 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய ஆதித்யா நிறுவனம், வி.ஐ.பிக்களுக்கு அதே ஒரு ஏக்கர் நிலத்தை 1 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

மேலும், ஐதராபாத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சர்ச்சைக்குரிய நிலமானது, “சுமார் 3000 ஏக்கர் சாகுபடிக்குத் தேவையான மழை நீர் பிடித்து வைக்கும் ஆதாரம்” என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பிரச்சனை வெடிக்கும் என்று முன் கூட்டியே யூகித்த கோட்டா ரெட்டி, தனது துப்பாக்கி மற்றும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள மனைகளின் பத்திரங்களை உறவினர் சுதிர் ரெட்டி திருடிவிட்டதாகக் கடந்த வாரம், அங்குள்ள காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன் காரணமாக, நிலத்தை விற்ற ஆதித்யா நிறுவனத்தின் இரு உரிமையாளர்களிடையே, அடுக்கடுக்கான முறைகேடுகள் ஒன்றன் பின் ஒன்றாக தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், சர்ச்சைக்குரிய இந்த நிலத்தை, கடந்த 2008 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கருக்கு, 6 ஏக்கர் நிலத்தை ஆதித்யா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 

அதே போல், நடிகை நயன்தாராவிற்கும் ஏக்கர் கணக்கில் அந்நிறுவனம் நிலத்தை விற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், நடிகை ரம்யாகிருஷ்ணனும் இந்த பிரமாண்டமான விளம்பரத்தை நம்பி ஆதித்யா நிறுவனத்திடம் இருந்து சுமார் 2 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். 

அத்துடன், இவர்களைப் போலவே சினிமா, விளையாட்டு மற்றும் பிற தொழிலதிபர்கள் என்று பல்வேறு பிரபலங்களும் ஆதித்யா நிறுவனத்திடமிருந்து சர்ச்சைக்குரிய நிலத்தை வாங்கி உள்ளனர்.

ஆனால், நிலத்தை வாங்கிய எந்த பிரபலமும் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தியாவின் முக்கிய வி.ஐ.பிக்கள் வாங்கியுள்ள நிலத்தில் கட்டுமானம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த வழக்கில் அடுத்தடுத்து சில அதிரடியான விசயங்கள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.