வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு நேற்று மீண்டும் துவங்கியது. 

முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார் சிலம்பரசன். ஒரு மாத காலத்திற்குள் நடித்து முடித்ததுடன், டப்பிங்கும் பேசிக் கொடுத்துவிட்டார். சிம்பு, இப்படி தீயாக வேலை செய்வதை பார்த்து வியக்காதவர்களே இல்லை. இதே போன்று இருங்கள் சிம்பு என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

புதுச்சேரியில் நடக்கும் மாநாடு படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டுள்ளார். முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. முன்பெல்லாம் சிம்புவின் படங்கள் பற்றி இயக்குனர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் அப்டேட் கொடுத்தால் தான் தெரிய வரும். ஆனால் தற்போது அப்படி இல்லை. சிம்பு மீண்டும் சமூக வலைதளங்களில் என்ட்ரி கொடுத்ததில் இருந்து தன் படங்கள் குறித்து அவரே அவ்வப்போது அப்டேட் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார். மாநாடு படப்பிடிப்பில் கலந்து கொண்டதை புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் சிம்பு.

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. 

கடந்த வாரம் நடிகர் படவா கோபி படக்குழுவில் இணைந்தார். மாநாடு படப்பிடிப்பு தளத்தில் இருந்து, இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் ஆடை வடிவமைப்பாளர் வாசுகியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து பதிவு செய்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. நேற்று வெளியான ஈஸ்வரன் டீஸர் சிலம்பரசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதுகுறித்து பதிவு செய்த வெங்கட் பிரபு, ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல் காலிக்கின் வாழ்த்துக்கள்.. விரைவில் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என்று கூறியுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சிலம்பரசன் ரசிகர்கள்.