கன்னட சினிமா துறையினர் போதைப் பொருள் பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் சில சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சம்மந்தப்பட்டு இருந்தது தெரியவந்தது. இச்செய்தி கன்னட திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

தொடர்ந்து நடத்திய விசாரணையில், போதைப் பொருட்களை பயன்படுத்தியது மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தொடர்பாக, கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களுடைய நண்பர்கள் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் சட்டவிரோதமாக சொத்து சேர்த்து இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுபற்றி அமலாக்கத் துறையினர் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு, வருமான வரித்துறைக்கு சென்றுள்ளது. அவர்கள் இவ்வளவு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக விசாரிக்க உள்ளனர்.

இதனையடுத்து சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டு இருந்த சஞ்சனாவும் ராகிணியும் தினமும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. நடிகை ராகிணி, இரவில் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. நள்ளிரவு வரை ராகிணி படிப்பதால், அதே அறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனா கல்ராணியால் தூங்க முடியவில்லையாம்.

இதனால் லைட்டை அணைப்பது தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது. இதுபற்றி சிறை நிர்வாகத்துக்கு தகவல் சென்றதாகக் கூறப்படுகிறது. போதை வழக்கில் கைதாகி இருப்பதால், இவர்களுக்கு தனி அறை ஒதுக்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்களை வெவ்வேறு அறைகளுக்கு மாற்றியுள்ளனர். நடிகை சஞ்சனா கல்ராணி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண் கைதி ஒருவரின் அறைக்கும் நடிகை ராகிணி திவேதி, கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெண் கைதி அறைக்கும் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.