உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டுவிழாவையொட்டி, ரூ.75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டார். 

அப்போது பிரதமர் மோடி, ``பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை பற்றியும், அதன்மீது அரசு எப்போது முடிவு எடுக்கும் எனவும் கேட்டு நாடு முழுவதும் இருந்து பெண்களிடம் இருந்து எனக்கு நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த குழு தனது பரிந்துரையை அளித்த உடன் அதுபற்றிய முடிவை அரசு விரைவாக எடுத்து அறிவிக்கும் என்ற உறுதியை நான் அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்.

இந்நிலையில் இன்றைய தினம், மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழா 2020-இல் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ``பண்டைய இந்தியாவின் சிறப்பான கல்வி மற்றும் வருங்கால இந்தியாவின் லட்சியங்கள் மற்றும் திறன்களின் மையமாக மைசூர் பல்கலைக்கழகம் விளங்குகிறது என்றும் ராஜர்ஷி நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் மற்றும் எம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் இலட்சியம் மற்றும் உறுதிகளை இந்தப் பல்கலைக்கழகம் நிறைவேற்றியுள்ளது. கல்வியின் மூலம் பெற்ற அறிவை வாழ்வின் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்துமாறு மாணவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். அறிவைப் பயன்படுத்த பல்வேறு  வாய்ப்புகளை வழங்கும் வாழ்க்கையை ஒரு பெரிய பல்கலைக்கழகம்" என்று கூறினார்.

அதன்பிறகு, வாழ்வின் கடினமான காலங்களில், கல்வி வெளிச்சத்தைத் தருகிறது என்னும் புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் மற்றும் சிந்தனையாளர் கோரூரு ராமசாமி ஐயங்கார் அவர்களின் வார்த்தைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

பின்னர் பேசிய அவர், ``21 ம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப இந்திய கல்வி முறையை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாகவும், உள்கட்டமைப்பு உருவாக்கம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியின் சர்வதேச மையமாக இந்தியாவை மாற்றுவதற்கும், நமது இளைஞர்களை போட்டித் திறன் மிக்கவர்களாக ஆக்குவதற்கும் அதிக எண்ணிக்கையிலும், சிறப்பான முறையிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆறு வருடங்களில் சராசரியாக ஒரு வருடத்துக்கு ஒரு ஐஐடி திறக்கப்பட்டு கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் உள்ள தார்வாடிலும் ஒரு ஐஐடி செயல்படுகிறது என்று கூறிய பிரதமர், 2014-இல் இந்தியாவில் வெறும் 9 ஐஐடிக்களே இருந்தன. அதைத் தொடர்ந்து வந்த ஐந்து வருடங்களில் 16 ஐஐடிக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஐந்தாறு வருடங்களில் 7 புதிய ஐஐஎம்கள் நிறுவப்பட்டுள்ளன. அதற்கு முன்பு இந்தியாவில் வெறும் 13 ஐஐஎம்களே இருந்தன என்றும் பிரதமர் தெரிவித்தார். கடந்த ஆறு தசாப்தங்களாக வெறும் 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே நாட்டில் சேவைகளை வழங்கி வந்தன. 2014க்குப் பிறகு எட்டு எய்ம்ஸ் மருத்துவமனைகள் நிறுவப்பட்டுள்ளன அல்லது நிறுவப்பட்டுக் கொண்டிருக்கின்றன" என்றார்.

தொடர்ந்து, கடந்த 5-6 வருடங்களில் உயர்கல்வித் துறையில் எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் புதிய கல்வி நிறுவனங்களை நிறுவுவது தொடர்பானது மட்டுமே அல்ல என்றும் இந்த நிறுவனங்களில் பாலின மற்றும் சமூக பங்கு பெறுதலுக்கான சீர்திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிய பிரதமர், இத்தகைய நிறுவனங்களுக்கு அதிக தன்னாட்சி வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார். இதன்மூலமாக, நாட்டின் கல்வித் துறையில் அனைத்து மட்டங்களிலும், பெண் குழந்தைகளின் மொத்த சேர்க்கை விகிதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.