தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோக்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து ஒரு குட்டி லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு நடிகை டாப்ஸியுடன் ஆனபெல் சுப்ரமணியம் படத்தில் நடித்து முடித்தார். 

தற்போது எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

இந்நிலையில் முதலமைச்சர் தாயார் மறைவையொட்டி, எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. சென்னை பசுமை வழி சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில், மறைந்த முதலமைச்சரின் தாயாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் விஜய் சேதுபதி. 

இன்று மதியம் தான் 800 திரைப்படத்தில் இருந்து விலகினார் விஜய் சேதுபதி. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியதால் முரளிதரனின் விடுத்த அறிவிப்பை ஏற்று விலகினார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள். XB பிலிம்ஸ் தயாரித்த மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. 

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவான துக்ளக் தர்பார் திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர், அமீர்கானுடன் லால் சிங் சத்தா போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் விருமாண்டி இயக்கத்தில் வெளியான  கா.பெ. ரணசிங்கம் படத்தில் விஜய்சேதுபதி நடித்திருந்தார். Zeeplex தளத்தில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி இந்த வெளியான இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.