தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே.பாக்யராஜ் அவர்களின் மகனான சாந்தனு பாக்கியராஜ் சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வரும் சாந்தனு கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

அடுத்ததாக சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் முருங்கக்காய் சிப்ஸ் திரைப்படம் திரைக்கு வர தயாராக உள்ளது. கடந்த மாதம் திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் தரண் குமார் இசையில் இத்திரைப்படத்தின் முதல் பாடலாக “ஏதோ சொல்ல” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் “டாக்கு லெஸ்ஸு ஒர்க் மோரு” என்ற  பாடல் தற்போது யூடியூபில் வெளியாகி உள்ளது. 

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளரகளான  சிவாங்கி மற்றும் ஷாம் விஷாலின்  குரலில் வெளிவரும் முதல் தமிழ் சினிமா பாடல் “டாக்கு லெஸ்ஸு ஒர்க் மோரு”  பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலக்கிய சிவாங்கி தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

தன்னுடைய குழந்தைத்தனமான சேட்டைகள்  மற்றும் கொஞ்சும் குரலால் அனைவரையும் வசீகரிக்கும் சிவாங்கி  நல்ல பாடகியும் ஆவார். வெகுநாட்களாக சிவாங்கி கட்டாயம் தமிழ் சினிமாவில் கால் பதிக்க வேண்டும் என்று சிவாங்கியின் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு விருந்தாக தற்போது சிவாங்கியின் குரலில் முதல் பாடலாக முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்திலிருந்து “டாக்கு லெஸ்ஸு ஒர்க் மோரு”  பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.