திரையுலகின் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் நடிகர் மாதவன். இவர் நடிப்பில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடிப்பதோடு திரைக்கதை எழுதி இயக்கி தயாரிக்கவும் செய்கிறார். 

நம்பி நாராயணன் மேல் எழுந்த குற்றச்சாட்டும், சிறை வாழ்க்கையும், பின்னர் குற்றமற்றவர் என்று நிரூபணமானதும் ஒரு கமர்ஷியல் திரைக்கதையிலும் காண முடியாத வலியான திருப்பங்கள். மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். 

இன்று மாணவ, மாணவியரின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தையும், கோயம்புத்தூர் மூன்றாவது இடத்தையும், விருதுநகர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. பலரும் தங்கள் பிள்ளைகள் பெற்ற மதிப்பெண்களை ட்விட்டரில் வெளியிட்டு சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

சரியான மதிப்பெண்கள் வாங்காதவர்கள் தவறான முடிவை எடுத்துவிடக்கூடாதென பலர் அறிவுரை கூறி பதிவு செய்து வருகின்றனர். மதிப்பெண்கள் வெறும் எண்கள் தான் என்பதை மாணவர்களுக்கு எடுத்துரைத்து மோட்டிவேட் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் தேர்வு முடிவுகள் குறித்து நடிகர் மாதவன் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். தேர்வு முடிவுகளை பெற்ற அனைவருக்கும், எதிர்பார்ப்புகளை தாண்டி சாதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். நான் பிளஸ் 2 தேர்வில் 58 சதவீத மதிப்பெண் தான் வாங்கினேன் என்பதை மற்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஆட்டம் இன்னும் துவங்கவே இல்லை என் நண்பர்களே என தெரிவித்துள்ளார். வாழ்க்கையின் ஓர் அங்கம் தான் கல்வி. கல்வி மிக முக்கியமான ஒன்று தான். ஆனால் கல்வியை விட முக்கியமான பல விஷயங்கள் இவ்வுலகில் உள்ளது. மாதவனின் இந்த பதிவு இளைஞர்ளுக்கு எனர்ஜி பூஸ்டராக உள்ளது. 

ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா நடித்துள்ள திரைப்படமான சைலன்ஸ் படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார் மாதவன். திகில் கலந்த கிரைம் த்ரில்லரான இப்படம் ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக இயக்குனர் திலீப் குமார் இயக்கத்தில் சார்லி ரீமேக்கான மாறா திரைப்படத்தில் நடித்துள்ளார்.