ஆசிய டெவலப்மென்ட் வங்கியின் (ஏடிபி) துணைத் தலைவராக இந்தியத் தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா பொறுப்பேற்க இருக்கிறார். இவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குப் பதவிக்காலம் இருக்கும் நிலையில் புதிய பொறுப்புக்குச் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த அசோக் லவாசா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் கடந்த ஜனவரி 2018-ல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கும் சுனில் அரோராவின் பதவிக் காலம் முடிவதற்கு இன்னும் இரு ஆண்டுகள் இருக்கிறது. அந்தவகையில் 2022 - ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையாளராக இவர் நீடிப்பார் என்றும், அதன்பிறகு அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், தன்னுடைய பதவிக் காலம் முடியும் முன்னரே தன்னுடைய தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பதவியை ராஜினாமா குறித்து லவாசா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

அசோக் லவாசா 2018-ம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதி தேர்தல் கமிஷனராக லவாசா பொறுப்பேற்று இருந்தார். அரியானா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நிதித்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2001-02 ஆம் ஆண்டுகளில் பொருளாதார விவகாரத்துறையில் இணை செயலாளராக ஆசியன் டிவலப்மென்ட் வங்கிக்கு பணியாற்றியுள்ளார்.

இவரது தலைமையில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ஏற்பட்டிருக்கும் மாற்றத்தால் அந்தப்பணி வேறொருவர் கைகளுக்கு மாறலாம் எனக் கணிக்கப்படுகிறது.

ஒருவேளை அவர் பதவி விலகினால், பதவிக்காலம் முடியும் முன்னரே, பொறுப்பிலிருந்து வெளியேறும் 2-வது தேர்தல் ஆணையர் இவர் என்ற பெயரைப் பெறுவார். இதற்கு முன்பு 1973-ம் ஆண்டு தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நாகேந்திர சிங், ஹாஹ்வேவில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய அடுத்து பதவிக் காலம் முடியும் முன்பே விலகினார்.

இந்த அசோக் லவாசா, கடந்த 2019 தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவின் தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்த விவகாரத்தில் முரண்பட்டு நின்று, போர்க்கொடி தூக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விவகாரத்தில், `தேர்தல் ஆணையத்தின் நன்னடத்தை விதிகளை மீறும் வழக்குகள் விரைவாகவும் வெளிப்படையாகவும் எந்தவித பாரபட்சமுமின்றி விசாரிக்கப்பட வேண்டும்' என்று கூறியிருந்தார். மோடி மற்றும் அமித்ஷாவுக்கு, கிளீன் சிட் கொடுக்க மறுத்துத் தெரிவித்த காரணத்துக்காக, பலராலும் பாராட்டவும் விமர்சிக்கவும் பட்டார் இவர். 

இந்த விவகாரத்தில் அவருடைய கருத்தை 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையக் குழு ஏற்காததால் குழு விவாதத்திலிருந்து அவர் வெளியேறினார். இதனால் அந்தநேரத்தில் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டார். இந்தச் சூழலை அடுத்து, லவாசாவின் மனைவி நாவல் சிங்கால் லவாசா மீதும் அந்த நேரத்தில் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அவர்மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்திருந்தது. அசோக்கின் மனைவி மட்டுமன்றி அவரின் மகன், சகோதரி ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. அனைவருமே தங்க மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்து இருந்தனர். 

இப்போது அசோக் லவாசாவுக்கு அளிக்கப்பட இருக்கும் ஆசியன் டிவலப்மென்ட் வங்கியின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும். அந்தக்காலம் முடிந்தவுடன், அவர் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப் பதவிக் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். இந்த வங்கியில் தலைவருக்குக் கீழே ஆறு துணைத் தலைவர்கள் இருப்பார்கள். திவாகர் குப்தா வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுகிறார். அந்த இடத்தைத்தான் லவாசா நிரப்ப இருக்கிறார்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் தனியார்த் துறை நடவடிக்கைகள் மற்றும் அரசு தனியார் கூட்டமைப்பு ஆகிய துறைகள் அவரது பொறுப்பில் விடப்படும் என்று சொல்லப்படுகிறது.

- பெ.மதலை ஆரோன்.