கென்யா நாட்டில் 12 வயது சிறுமி ஒரே மாதத்தில் 2 ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியின் மேற்கு நரோக் பகுதியில் தான், இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உலகமே கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கும் இந்த அபாயகரமான சூழலில், கென்யா நாட்டிலும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

கென்யா நாட்டில் ஏற்கனவே வறுமை வாட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயால் வறுமை என்னும் கொடிய நோய் முன் எப்போதும் இல்லாத வகையில், தற்போது இன்னும் அதிகரித்துக் காணப்படுகிறது. 

மேலும், கொரோனா காரணமாகப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், அந்நாட்டில் பள்ளிகள் அனைத்தும் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. பள்ளியில் வழங்கப்படும் உணவிற்காக சில பெண் குழந்தைகள் பள்ளிக்கு வந்திருந்த நிலையில், தற்போது அதுவும் இல்லாமல் அந்த சிறுமிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

அத்துடன், கென்யாவில் ஏற்கனவே அதிக அளவிலான குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அந்நாட்டில் குழந்தை திருமணங்கள் தற்போது மேலும் அதிகரித்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அதே நேரத்தில், கென்யாவை நாட்டின் சட்ட திட்டங்களைப் பொறுத்த வரை, 18 வயதுக்கு மேல் தான் பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. இதனால், 18 வயதிற்குட்பட்ட ஒருவரைத் திருமணம் செய்வது என்பது, அந்நாட்டில் குற்றச் செயலாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், வறுமையைக் காரணம் காட்டி, அந்நாட்டில் பல குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் தற்போது எழுந்துள்ளன.

குறிப்பாக, அந்நாட்டின் நரோக் கவுண்டியில் வசிக்கும் 'மாசாய்' சமூகத்தினரிடையே தான், இந்த குழந்தை திருமணங்கள் அதிகமாகக் காணப்படுவதாகவும் குற்றம்சாட்டப் படுகிறது. இந்த சமூகத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை, வயதுக்கு வந்ததுமே உடனடியாக திருமணம் செய்வது வழக்கமாக நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. 

மாசாய் சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் பெற்றோர்களால் வருவாய் ஈட்டும் பொருளாகவே பார்க்கப்படுவதாகவும், அதற்கு அந்த சமூகத்தில் பழக்கம் வழக்கம் என்பதைத் தாண்டி, அவர்களிடையே நிலவும் வறுமை தான் முக்கிய காரணம் என்றும் கருதப்படுகிறது. 

முக்கியமாக, வறுமையின் காரணமாக ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளுக்கு ஈடாகத் தந்தையால் பெண் குழந்தைகள் பார்க்கப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

அந்த பகுதியில் உள்ளவர்கள் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை யார் அதிக அளவில் பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்குத் தருகிறார்களோ, அவர்களுக்கு தங்களது சிறு பிள்ளையான 18 வயது கூட நிரம்பாத சிறுமிகளைத் திருமணம் செய்து வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படிதான், தற்போது ஒரு சிறுமிக்கு ஒரே மாதத்தில் 2 பேருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள நரோக் பகுதியில் மாசாய் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை அவரது பெற்றோரே, வறுமையின் காரணமாக வெறும் 4 மாடுகளைப் பெற்றுக்கொண்டு; 51 வயதான நபருக்குக் கடந்த மாதம், தன் மகளைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துள்ளனர்.

சிறுமியோ, தந்தையின் கட்டாயத்தால் திருமணம் செய்துகொண்ட நிலையில், அந்த 51 வயது நபரின் பாலியல் துன்புறுத்தல்களை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல், அங்கிருந்து எப்படியோ தப்பித்து தன் பெற்றோர்களிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்துள்ளார்.

இதனையடுத்து, சிறுமியின் தந்தை மறுபடியும் கட்டாயப்படுத்தி, அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபருக்கு, சில மாடுகளைப் பெற்றுக்கொண்டு, தன் 12 வயது மகளை அதே மாத்தில் மீண்டும் திருமணம் செய்து வைத்துள்ளார். சிறுமியும், வேறு வழி இல்லாமல் அவரை திருமணம் செய்துகொண்டு, அவருடன் சென்றுவிட்டார்.

இது குறித்து தகவல், அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களுக்குப் புகாராகச் சென்றது. இது குறித்து விரைந்து வந்த அதிகாரிகள் அதிரடியாகச் சிறுமியை மீட்டனர். அத்துடன், அந்த 35 வயதான நபரைக் கைது செய்ய முயன்றபோது, அவர் தப்பி ஓடி உள்ளார். அதே போல், சிறுமியின் தந்தையும், முதன் முதலாக திருமணம் செய்து வைக்கப்பட்ட 51 வயதான நபரும் தற்போது தலைமறைவாகி உள்ளனர். இதனையடுத்து, வழக்குப் பதிவு செய்த அந்நாட்டு போலீசார், தலைமறைவாக உள்ள 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம், அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.