தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஃபேன் பாய் சம்பவமாக உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்த (2022)ஆண்டில் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி வசூலில் பெரும் சாதனைகள் படைத்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்தடுத்த திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

முன்னதாக கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்களில் உள்ள தொடர்புகளைக் கொண்டு ரசிகர்களால் வழங்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் கொண்டாடப்பட்ட LCU எனும் லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸில் கைதி 2 இந்த 2023 ஆண்டு இறுதிக்குள் தொடங்க இருக்கிறது. இதனிடையே மாஸ்டர் படத்திற்கு பின் மீண்டும் தளபதி விஜய் உடன் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார்.

இந்த தளபதி 67 திரைப்படமும் LCUல் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்களிடையே நிலவும் நிலையில் சமீபத்தில் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தளபதி 67 திரைப்படத்தில் தளபதி விஜயுடன் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் ப்ரித்விராஜ், ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர் என தகவல்கள் வெளிவரும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வாரிசு பட ரிலீஸுக்கு பிறகு ஒவ்வொன்றாக வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள தனியார் திரையரங்கில் ரசிகர்களோடு கண்ட ரசித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, “ரொம்ப நாட்கள் கழித்து அவரை (தளபதி விஜய்) இப்படி பார்ப்பது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது. குடும்பங்களுக்காக செய்தது. எனக்கு மிகவும் பிடித்தது.” என வாரிசு படம் குறித்து பதிலளித்தார்.

தொடர்ந்து அவரிடம் தளபதி 67 திரைப்படம் குறித்து கேட்டபோது, “இந்த படத்திற்காக தானே காத்திருந்தோம். இப்போது ரிலீஸாகிவிட்டது அல்லவா.. தேதியை நானே சொல்கிறேன்” என தெரிவித்தார். மேலும் தளபதி 67ல் தளபதி விஜயை எவ்வளவு புதுசாக காட்டப் போகிறீர்கள்? என கேட்டபோது, “நீங்கள் பாருங்கள்” என பதிலளித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அந்த பேட்டி இதோ…