இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை பொங்கலை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். காரணம், நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களான தளபதி விஜய் மற்றும் அஜித் குமாரின் வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே தினத்தில் இன்று ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ்.

அனைத்து வயதினரும் விரும்பும் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தயாராகி இருக்கும் வாரிசு மற்றும் இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் சுவாரஸ்யமான ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் துணிவு என இரண்டு படங்களும் ரசிகர்களிடையே தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

சாதாரணமாகவே இந்த இரண்டு நட்சத்திரங்களில் ஒருவரது திரைப்படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் திரையரங்குகளில் திருவிழா கொண்டாடும் ரசிகர்கள் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளிவந்தால் அந்த திருவிழாக்களின் கொண்டாட்டமும் ஆரவாரமும் பல மடங்கு கூடிவிடும். அதுவும் இந்த முறை பொங்கல் திருவிழாவிலேயே இருவரின் படங்களும் ரிலீஸ் ஆவதால் திரையரங்குகளில் ரசிகர்கள் தீபாவளியே கொண்டாடுகிறார்கள்.

அந்த வகையில் இன்று (ஜனவரி 11)நள்ளிரவு முதலே உலகெங்கும் திரையரங்குகளில் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை காண அதிக ஆர்வம் காட்டிய நிலையில், சென்னையில் உள்ள முன்னணி திரையரங்குகளில் ஒன்றான ரோகிணி திரையரங்கில் இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் வெடித்தது. இரண்டு தரப்பு ரசிகர்களும் பேனர்களை கிழித்து மோதிக்கொண்டதில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து ரோகினி திரையரங்க உரிமையாளர் திரு.ரேவந்த் சரண் அவர்கள் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய போது, “நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டோம். போலீசாரின் உதவி இருந்தது, மேலும் கூடுதலாக பவுன்சர்கள் வைத்திருந்தோம். அதையும் மீறி சில விஷயங்கள் நம் கைமீறி நடக்கும் போது, நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. அந்த சமயத்தில் தியேட்டருக்கும் நிறைய சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நாம் பொறுமையாக தான் இருக்க வேண்டும். இப்போது அனைத்தும் தீர்ந்துவிட்டன. இதற்கு மேல் எந்த பிரச்சனையும் நடக்காது என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார் அந்த முழு பேட்டி இதோ…