கடந்த 2018-ம் ஆண்டு விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் பி.எஸ்.மித்ரன். அர்ஜுன், சமந்தா, டெல்லி கணேஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு, வங்கி மோசடி போன்ற நிஜ சம்பவங்களை கொண்டு அற்புதமாய் அமைந்தது. விமர்சன ரீதியாகவும், ரசிகர்களின் பார்வையிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹீரோ ஜானரில் அமைந்தது. கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கல்வி துறையில் நடக்கும் மோசடி குறித்தும், கல்வியை பிஸ்னஸாக மாற்றும் கயவர்களின் செயல் குறித்தும் அற்புதமாக காண்பித்திருப்பார் மித்ரன். படம் வெளியான தருணத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றது இந்த படம். 

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வருகின்றனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பி.எஸ். மித்ரன் சினிமா சார்ந்த பதிவுகள், விழிப்புணர்வு பதிவுகள், சமூகம் சார்ந்த பதிவுகள் என சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவரது பதிவுகளுக்கென தனி ரசிகர்கள் உண்டு. 

இந்நிலையில், மித்ரன் பெயரை கொண்டு மர்ம ஆசாமி ஒருவர், நடிகர் நடிகைகளை ஆடிஷனுக்கு அழைப்பு விடுத்து ஏமாற்றி வருவதாக பதிவு செய்துள்ளார். மித்ரனின் அசோசியேட் என்று கூறி, இணையவாசிகளின் தொலைபேசி எண்களையும், புகைப்படங்களையும் வாங்க முயற்சித்துள்ளார். மித்ரனின் பார்வைக்கு இந்த விஷயம் வந்தவுடன், நான் இதுபோன்ற ஆடிஷன் ஏதும் செய்யவில்லை. எந்த புகைப்படமும் கேட்கவில்லை. இதுபோன்ற மெயில்களை பார்த்தால் ரிப்போர்ட் செய்யுங்கள் என்று எச்சரித்து ரசிகர்களுக்கு உதவியுள்ளார். 

இயக்குனர்கள் பிரபலமாகி விட்டால் அவர்களது பெயரை கொண்டு இணையதள மோசடிகள் நடப்பது வழக்கம். ரசிகர்கள் தான் எச்சரிகையுடன் இருக்க வேண்டும். சமீபத்தில் இயக்குனர் விஷ்ணு வர்தன் பெயரில் போலி முகநூல் அக்கௌன்ட் கிளம்பியது. இதுகுறித்து அவரும் தெளிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

லாக்டவுனில் வீட்டில் இருக்கும் பி.எஸ்.மித்ரன் ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டு வர அதிகம் வாய்ப்புள்ளது. விரைவில் தரமான அப்டேட்டுடன் ரசிகர்களுக்கு விருந்தளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.