கோவிட் - 19 கொரோனா வைரஸ் எப்படிப் பரவும் என்பதற்கு விளக்கமாக, சளி - இருமல் - நெருங்கி நின்று பேசுதல் மூலம் வெளிவரும் நீர்த்துளிகள் வழியாகத்தான் அது பரவும் என்றுதான் கூறப்பட்டிருந்தது. அதனால்தான், மாஸ்க் அணியவேண்டும் - பேசும்போது 6 மீட்டர் இடைவெளி வேண்டும் - தனித்திரு, விலகியிரு என்றெல்லாம் அரசும் அதிகாரிகளும் சொல்லிவந்தனர்.

ஆனால், இந்தக் கூற்றுக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கொரோனா காற்றில் பரவும் வைரஸ் என்பது தற்போது தெரியவந்துள்ளது. உலகளவில், 32 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த, 239 ஆய்வாளர்கள் ஒன்றுசேர்ந்து இந்தக் கருத்தை சில தினங்களுக்கு முன் தெரிவித்தனர். கொரோனா காற்றிலேயேவும் பரவுகிறது என்பதற்கு, தங்களிடம் ஆதாரமிருப்பதாகவும், அதை கணக்கில் கொண்டு உலக சுகாதார நிறுவனம் உடனடியாக நோய்ப்பரவுதல் குறித்த தனது மறுஅறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். அறிவிப்பு வெளியிட்ட அடுத்தடுத்த நாள்களிலேயே, தங்களின் ஆதாரங்களை அறிவியல் தளமொன்றில் வெளியிடவும் செய்தார்கள் அவர்கள். ஆங்கிலத்தின் நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகையின் வழியாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அறிவிப்பைக் கவனித்த உலக சுகாதார நிறுவனம், அடுத்த நாளில் அறிக்கையொன்றை வெளியிட்டது. அதில், `கூட்டம் அதிகமுள்ள, முற்றிலும் மூடப்பட்ட மற்றும் மோசமான காற்றோட்ட வசதி உள்ள இடங்களில் காற்று வழியாக இந்த வைரஸ் பரவலாம் என்பதை மறுக்க இயலாது. இருப்பினும் காற்றில் கொரோனா பரவும் என உறுதியாக மறு அறிக்கை இப்போது வெளியிட முடியாது. இன்னும் உறுதியான, துல்லியமான முடிவுகள் வந்தால் மட்டுமே மறு அறிக்கை தரப்படும்" என்று உலக சுகாதார நிறுவன அதிகாரியொருவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அறிவியலாளர்கள் அனைவரும், ``ஒருவேளை ஆதாரம் உறுதி செய்யப்பட்டால் இப்போது கடைப்பிடித்து வரும் தடுப்பு நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் செய்யவேண்டிவரும். தொற்றே இல்லாவிட்டாலும் கூட, வீட்டுக்குள்ளேயே மாஸ்க் அணிந்து கொண்டு நடக்கும் நிலை கூட மனிதர்களுக்கு ஏற்படலாம். உலகமே வேறொர் திசையில் செல்லும் அளவுக்கு எச்சரிக்கையான செய்தி இது. ஆகவே உலக சுகாதார நிறுவனம் தாமதிக்காமல் அறிவிப்பை வெளியிட வேண்டும்" எனக்கூறினர்.

உலக சுகாதார நிறுவனமும், விரைந்து தன் பங்குக்கான ஆய்வுகளைத் தொடங்கியது. முடிவில், தற்போது  மூடியிருக்கும் அறைகளில் இருக்கும்போது காற்றின் வழியாகும் என ஒப்புக்கொண்டுள்ளது.

வெளியிடங்களிலும் கொரோனா பரவும் என உறுதிசெய்யப்பட்டால், வரும் காலங்களில் நாம் அனைவரும் வீட்டுக்குள்ளேவும் மாஸ்க் அணியும் நிலை வரலாம். குறைந்த விலை மாஸ்க், வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படலாம். குறிப்பாக முதல் நிலை பணியாளர்களுக்கு, என் 95 மாஸ்க் அணியவேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படும். பள்ளி, கல்லூரி தொடங்கி மருத்துவமனைகள் வரை கூட்டம் நிறைந்த, மூடியிருக்கும் இடங்கள் அனைத்திலும் வெண்டிலேட்டர் சிஸ்டம் வைத்து காற்று வெளியேற்ற வேண்டிய நிலை வரலாம். அறைகளின் கதவுகளிலும் வைரஸ் ஒட்டியிருக்கலாம் என்பதால், பொது இடங்களிலிருக்கும் கைப்பிடிகளில் அல்ட்ராவைலட் கதிர்கள் மூலம் அவற்றைச் சுத்தப்படுத்தும் நிலை ஏற்படலாம்.

இப்போதைக்கு, நெருக்கமான இடங்களில் கூட வேண்டாம், கூட்டம் கூடவே வேண்டாம், காற்றோட்டமில்லா இடங்களில் இருக்க வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுரை கூறியிருக்கிறது. சமூக இடைவெளி இல்லாத இடத்தில், மாஸ்க் அத்தியாவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த அறிவுரைகள் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லை என்றும், கடுமையான மறுதிருத்த 'கொரோனா பரவும் விதம்' அறிவிப்பு வர வேண்டும் என்றும் விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் கோரிக்கை வைக்கிறார்கள். ஒவ்வொரு விநாடி செய்யும் தாமதமும், ஆபத்துதான் என எச்சரிக்கவும் செய்கிறார்கள் இவர்கள்.

கொரோனாவின் கோரமான பக்கம், வரும் நாள்களில்தான் இன்னும் அதிகமாகத் தெரியும் எனச் சொல்லப்பட்டு வருகிறது. மொத்தத்தில், வரும் நாள்களில் அனைத்து அறிவிப்புக்கும், மக்கள் தயாராக இருக்க வேண்டும்!

- ஜெ.நிவேதா