இந்தோனேசியாவில் 300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தோனேசியா நாட்டில் ஆண்டு தோறும் சுமார் 70 ஆயிரம் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் என்று, உலகளாவிய கடத்தல் தடுப்பு மையம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாகத் தான், இந்தோனேசியாவில் 300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 65 வயதான பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகத் தென் கிழக்கு ஆசிய நாட்டிற்குச் சுற்றுலா விசாவில் பல முறை சென்று வந்திருக்கிறார். 

இதனிடையே, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த பிராங்கோயிஸ் கமிலி அபல்லோவை, கடந்த மாதம் அந்நாட்டு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

பிராங்கோயிஸின் கைதின் போது, அந்த நேரத்தில் அவர் ரூமில் இருந்த 2 சிறுமிகளையும் போலீசார் மீட்டனர். இதையடுத்து, அவரது அறையில் இருந்த அவருக்குச் சொந்தமான லேப் டாப் மற்றும் அவரது செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, பிராங்கோயிஸிடம் அந்நாட்டு போலீசார் நடத்திய விசாரணையில், “இந்தோனேசியாவில் மட்டும் சுமார் 300 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை அவர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. அத்துடன், அது தொடர்பான அதரங்கள் அவருடைய லேப் டாப் மற்றும் அவரது செல்போனில் இருந்ததையும் போலீசார் கண்டுப்படித்துள்ளனர்.

குறிப்பாக, பிராங்கோயிஸ் லேப் டாப்பில் சுமார் 10 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட 100 க்கணக்கான பெண் குழந்தைகளுடன் அவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஏராளமாக இருந்து உள்ளது.

மேலும், அந்த வீடியோவில் பிராங்கோயிஸ் உடன் நெருக்கமாக இருக்க மறுத்தவர்களை, அவர் அடித்து துன்புறுத்திவமான வீடியோவும் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அப்படி தன்னுடன் நெருக்கமாக இருக்க ஒப்புக் கொள்ளாத பெண் குழந்தைகளை அவர் அடித்து உதைத்துத் துன்புறுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக பிராங்கோயிஸ் இந்தோனேசியக் குழந்தைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி உள்ளதாகவும், இதில் உயிர் இழந்தவர்களும் இருக்கலாம் என்றும், போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அதேபோல், “குழந்தைகளை அணுகி அவர்களிடம் ஆசை ஆசையாகப் பேசும் பிராங்கோயிஸ், அவர்களுக்குப் பிடித்த பொருட்களை வாங்கித் தந்து, அவர்களைக் கவர்ந்திழுப்பார் என்றும், அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தே, குழந்தைகளை அவர் தன் வலையில் வீழ்த்தி உள்ளார் என்றும், அந்நாட்டின் ஜகார்த்தா காவல் துறைத் தலைவர் நானா சுட்ஜானா தெரிவித்துள்ளார்.

அத்துடன், “தன்னுடன் நெருக்கமாக இருக்க ஒப்புக் கொண்டவர்களுக்கு சுமார் 250,000 ரூபாய் முதல் முதல் ஒரு மில்லியன் ரூபாய் வரை, அவர் பணம் கொடுத்து வந்திருப்பதாகவும்” போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 17 டாலர் முதல், 20 டாலர் வரை, அவர் சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆட்களுக்குத் தகுந்தார் போல், சம்பளமாகக் கொடுத்து வந்திருக்கிறார்” என்பதும், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெண் குழந்தைகளிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஏராளமான வீடியோக்கள் ஆதாரமாக இருப்பதால், பிராங்கோயிஸ்க்கு அதிக பட்சமாக மரண தண்டனை வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே போல், இந்தோனேசியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்ட படி, பிராங்கோயிஸ்க்கு ஆயுள் தண்டனை அல்லது துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றம் விதிக்கப் படலாம் என்றும், அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு உள்ளன.

இதனிடையே, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிராங்கோயிஸ், இந்தோனேசியாவில் 300 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர குற்றத்திக்காக, அதிக பட்சமாக மரண தண்டனை கிடைக்க உள்ள சம்பவம், பிரான்ஸ் - இந்தோனேசியா மக்களிடையே, அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.