கடந்த 2003-ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து வெற்றி படங்கள் தந்து சின்னத்தளபதியாக உயர்ந்து நிற்கிறார். சென்ற வருட இறுதியில் வெளியான காளிதாஸ் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. 

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் பாடல் பாடி, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார் பரத். 

தற்போது பரத் நடிப்பில் நடுவன் படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியானது. ஷராங்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். தரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபர்ணா வினோத் மற்றும் கோகுல் இந்த படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

மலைப் பகுதியில் நடக்கும் திரில்லர் திரைப்படமாகும். படத்தின் மேக்கிங் ஏராளமான சவால்களை கொண்டிருந்தாம். ஸ்டண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது பரத் மற்றும் கோகுல் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப் பெண் ஆரத்யா ஆகியோரும் சண்டைக் காட்சிகளில் அவர்களே நடித்திருந்தனர். மழை மற்றும் மூடுபனியை பொருட்படுத்தாமல் சவாலான காட்சிகளில் பணிபுரிந்தார்களாம். 

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, ஒரு ஸ்டண்ட் காட்சியின்போது  நடிகர் பரத் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. ஓய்வெடுக்க வற்புறுத்தியும், அவர் உடனடியாக படப்பிடிப்பில்  கலந்து கொண்டார். அபர்ணா வினோத் எந்தவொரு டூப்பும் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடிக்கும் அளவுக்கு தைரியமாக இருந்தார் என்ற செய்தி இணையத்தில் பரவியது. 

இந்த படத்தை தொடர்ந்து பிரபு தேவா இயக்கத்தில் ராதே படத்தில் நடித்து வருகிறார் பரத். சல்மான் கான், மேகா ஆகாஷ் இந்த படத்தில் உள்ளனர். கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்பு பாதியில் நின்றது குறிப்பிடத்தக்கது.