வாயை மூடி பேசவும் எனும் தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் துல்கர் சல்மான். அதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் துல்கருக்கென தனி இடமுண்டு. 

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இது துல்கரின் 25-வது படமாகும். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடித்திருந்தார். மசாலா கஃபே இசையமைத்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் துல்கரின் நண்பராக நடித்திருந்தார். 

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஜே.ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்தது. படத்தில் கெளதம் மேனன் சிறப்பான பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படம் தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றில் மிகப்பெரிய TRPயை எட்டிப் பிடித்து சாதனை படைத்துள்ளது.இந்த ஆண்டு வெளியான பல படங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படமாகும்.

பொதுவாக தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ் சேனல்களில் TRPயை எகிற வைத்து வந்த காலம் போய் தற்போது தமிழ் படங்கள் தெலுங்கு தொலைக்காட்சிகளில் மாஸ் காட்டி வருகிறது. இதற்குமுன் தெலுங்கில் வெளியான பாகுபலி மற்றும் ஹிந்தியில் வெளியான டங்கல் போன்ற திரைப்படங்கள் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி சக்கை போடு போட்டது.

இந்நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் தெலுங்கு உரிமையை பெற்ற பிரபல தெலுங்கு தொலைக்காட்சி சமீபத்தில் இந்த திரைப்படத்தை ஒளிபரப்பியது. இவ்வாறு ஒளிபரப்பப்பட்ட இப்படம் அதிகமான வாடிக்கையாளர்களால் பார்க்கப்பட்டு 7.1 என்ற கணக்கில் TRP யை பெற்று இதுவரை இருந்த TRP ரேட்டிங்கை முறியடித்து தற்பொழுது இந்த படம் TRP யில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து பிருந்தா இயக்கவிருக்கும் ஹே சினாமிகா என்ற படத்தில் நடிக்கவுள்ளார் துல்கர். அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கவுள்ளார். ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.