பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1985-ம் ஆண்டு வெளியான முதல் மரியாதை படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமானார் இளவரசு. இதுவரை பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். பெரும்பாலும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும், வில்லன் நடிகராவும் நடித்திருப்பார். சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தாலும், இவரை நகைச்சுவை நடிகராக ரசித்தவர்கள் ஏராளம்.

சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படத்தில் அமிதாப் மாமா என்ற கேரக்டரில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இவர் செய்த காமெடி காட்சிகள் பிரமாதம். இதேபோல் மாயாண்டி குடும்பத்தார், முத்துக்குமுத்தாக ஆகிய படங்களிலும் குணச்சித்திர வேடத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் இளவரசு. 

இரண்டு நாட்கள் முன்பு நடிகர் இளவரசு ட்விட்டரில் இணைந்ததாக தகவல் பரவியது. இதனால் திரை ரசிகர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர். அவரது ட்விட்டர் கணக்கிலிருந்து, இப்போது தான் ட்விட்டருக்கு வந்திருப்பதாகவும், இதில் இணைவதில் மகிழ்ச்சி என்றும் பதிவிடப்பட்டிருந்தது. அவர் நடித்த படங்களின் மீம்ஸ் கொண்டு அவரை வரவேற்றனர். இந்நிலையில் அவரது ட்விட்டர் அக்கௌன்ட் போலியானது என்றும், அவர் சோஷியல் மீடியாவில் இல்லை என்றும் பிரபல இயக்குனரும் அவரது நெருங்கிய நண்பருமான சேரன் பதிவு செய்துள்ளார். 

இதுதொடர்பாக சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், நண்பரே... நான் திரு இளவரசு அவர்களிடம் விசாரித்ததில் இந்த டுவிட்டர் கணக்கு அவருடையது அல்ல என தெரிவித்தார்.. ஆகவே தயவுகூர்ந்து அவர் அனுமதியின்றி அவர் பெயரில் துவங்கப்பட்டிருக்கும் இந்த அக்கவுண்டை உடனடியாக நீக்கவும்.. என கேட்டுக்கொண்டார். இயக்குனர் சேரன் கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த லாக்டவுனில் இதை ஒரு தொழிலாக வைத்துள்ளனர் மர்ம நபர்கள். திரைப்பிரபலங்களின் பெயரில் போலி அக்கௌன்ட்டுகளை துவங்கி பணம் பறிப்பது, நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்வது என செய்து வருகின்றனர். இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். மேலும் இயக்குனர் சேரனின் இந்த நற்செயலை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். 

சேரன் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான வெற்றிக்கொடி கட்டு படத்தில் இளவரசு முக்கிய ரோலில் நடித்திருப்பார். பார்த்திபன்,முரளி, வடிவேலு, மீனா, சார்லி ஆகியோர் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். இளவரசு நடித்த சதுரங்க வேட்டை படத்தில் இடம் பெற்ற மீம்ஸ் வெளியிட்டு போலி அக்கௌன்ட் துவங்கியவர்களை கிண்டலடித்து வருகின்றனர் நெட்டிசன்கள். 

சமீபத்தில் இயக்குனர் விஷ்ணு வர்தன், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் போன்றோரின் பெயரில் போலி அக்கௌன்ட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.