இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. மத்திய அரசு இந்த ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நேற்று இரவு தெரிவித்திருந்தது. அதில், மாநிலங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்புக்கான விதிகளை சுயமாக விதித்துக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டிருந்தது. 

அதன்படி இன்றைய தினம் தமிழகத்தைப் பொறுத்தவரை, இதுவரை இருந்த அதே விதிமுறைகளோடு இன்னும் ஒரு மாதத்துக்கு (ஆகஸ்டு இறுதி வரை) ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இப்படி நீட்டிக்கப்பட்டுக் கொண்டே செல்லும் ஊரடங்கு காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-20 ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை  நீட்டிப்பதாக இன்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், நாள் ஒன்றில் சராசரியாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலிலிருந்தாலும்கூட, அவையாவும் கொரோனா பரவல் தடுப்பில் பெரிதாக உதவுவதாகச் சொல்லப்படவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தைச் செப்டம்பர் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஏப்ரல், 8 முதல், ஜூன், 30 வரையிலான காலகட்டத்தில், வருமான வரித் துறையில் வரி செலுத்திய, 20 லட்சத்து சொச்சம் பேருக்கு, 62,361 கோடி ரூபாயை ரீபண்டு தொகையாக வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதில், தனிநபர் வருமான வரி செலுத்திய, 19.07 லட்சம் பேருக்கு, ரீபண்டு தொகையாக, 23,454 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், கார்ப்பரேட் வரி செலுத்திய, 1.36 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, 38, 908 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நேரடி வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ள அறிவிப்பில், "இந்த ரீபண்டு தொகை, வரி செலுத்தியவர்களின் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் வரி செலுத்திய யாரும், இதுவரை ரீபண்டு கேட்டு, துறையில் கோரிக்கை வைக்கவில்லை. கேட்பதற்கு முன்னதாகவே வழங்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (டிபிடிடி) நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் சொல்லப்பட்டிருக்கும் மற்றொரு முக்கியமான விஷயம், `2018-19-ம் ஆண்டுக்கான வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜூலை 31-ம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது. இது தற்போது மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30-ம் தேதிவரை அவகாசம் வழங்கப்படுகிறது. வருமானவரிச்சட்டத்தின் படி, 80சி, 80டி 80ஜி பிரிவில் முதலீடூ, மருத்துவக்காப்பீடு, நன்கொடை ஆகியவற்றைக் கணக்கில் காட்டி பெறலாம்' என்பது.

இதன்மூலம், வருமானவரி கணக்குகளைத் தாக்கல் செய்ய 3-வது முறையாக அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. முதலில் மார்ச் 31 முதல் ஜூன் 30 என்று நீட்டித்தது. அதன்பின் ஜூலை 31-ம் தேதியாகவும், இப்போது செப்டம்பர் 30-ம் தேதியாகவும் நீட்டித்துள்ளது.

இந்த காலக்கெடுவுக்குள் வருமானவரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வோர் 2018-19-ம் நிதியாண்டுக்கான அசல் மற்றும் திருத்தப்பட்ட ரிட்டன் கணக்குகள் இரண்டையும் தாக்கல் செய்ய வேண்டும். புதிய நீட்டிப்புக்கு முன்பாக செலுத்தப்படும் வரி முன்கூட்டியே செலுத்தப்படும் வரியாகக் கருதப்படும் என மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.

-பெ.மதலை ஆரோன்