கடந்த வருடம் 2019 அக்டோபர் 4-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட்டானது. மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலை கொண்டு இந்த படம் உருவானது.

தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக்காகிறது. கலைப்புலி எஸ்.தாணு மற்றும் சுரேஷ் ப்ரோடக்ஷன்ஸ் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். தனுஷ் நடித்த வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியர் நடித்திருந்த வேடத்தில் பிரியாமணியும் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் அட்டலா இந்த படத்தை இயக்கி வருகிறார்.

படப்பிடிப்பு பணிகள் கொரோனாவின் அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் ப்ரோடக்ஷன்ஸ் ட்விட்டரில், நிலைமை சரியானதும் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். பொது இடங்களில் மக்கள் அதிகம் ஒன்று கூடுவதை தவிர்ப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள் என்று பதிவு செய்திருந்தது. 

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஹைதெராபாத்தில் துவங்கியுள்ளது. முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். தற்போது படத்தின் கிளைமாக்ஸ் காட்சியையும், சில ஆக்ஷன் காட்சிகளையும் படமாக்கி வருகின்றனர் என்ற தகவல் தெரியவந்தது. இந்த படப்பிடிப்பில் நடிகை பிரியாமணி, ராவ் ரமேஷ், ராஜீவ் கனகலா ஆகியோ கலந்து கொண்டுள்ளனர் என்று தகவலும் கிடைத்துள்ளது. கிட்ட தட்ட படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. 

விரைவில் படத்தின் டீஸர் குறித்த செய்திகள் வெளியாகும் என்ற ஆவலில் உள்ளனர் திரை ரசிகர்கள். இந்த 2020-ம் ஆண்டு வெங்கடேஷுக்கு எந்த படமும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு F2 மற்றும் வெங்கி மாமா போன்ற படங்களில் நடித்து அசத்தினார். நாரப்பா திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.