2020 ம் ஆண்டுக்கான அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை வந்துக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பகுதியிலும், மாகாணாத்திலும் யார் முன்னிலை என்ற எண்ணிக்கை, வெளிவந்தவண்ணம் உள்ளன. இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் ஜோ பிடன் 264 தேர்தல் சபை வாகுகளுடன் முன்னிலையில் உள்ளார். நவம்பர் 3 ம் தேதி தேர்தல் நாளுக்கு முன்னதாக தபால் வழியாக 10 கோடி  அமெரிக்கர்கள் வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதுவரை ஜோ பிடன் பெற்றுள்ள வாக்குகள் 70,298,271. இது, வாக்களித்தவர்களில், 50.3% என சொல்லப்படுகிறது. கடந்த 2008 - ம் ஆண்டு அதிபர் பராக் ஒபாமா பெற்ற வாக்குகள், 69,498,516. இதுதான் இதுவரை பெறப்பட்ட அதிக வாக்கு எண்ணிக்கையாக இருந்துவந்தது. தற்போது இந்த சாதனையை ஜோ பிடன் முறியடித்திருக்கிறார். அதிபர் டொனால்டு ட்ரம்ப் இதுவரை 67,567,559 (அதாவது, 48%) வாக்குகள் பெற்றுள்ளார். இது 2016 தேர்தலில் அவர் பெற்ற வாக்குகளைவிடவும், 2012-ல் அதிபர் பராக் ஒபாமா பெற்ற வாக்குகளைவிடவும் அதிகமாகும்.

வாக்குகளை பெறுவதில் ஜோ பிடன் சாதனை புரிந்தாலும், தேர்தல் சபை வாக்குகள் அடிப்படையில் அதிபர் தேர்வு நடைபெறுவதால், இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும் தங்கள் வேட்பாளரே இறுதியில் ஆட்சியை கைப்பற்றுவார் என கூறி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெள்ளை மாளிகையை கைப்பற்ற, ஒரு அமெரிக்க வேட்பாளர் மொத்தம் உள்ள  538 தேர்தல் வாக்குகளில் 270 ஐ வெல்ல வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலவரப்படி டொனால்ட் ட்ரம்பைவிட ஜோ பிடன் 50 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளார். இந்நிலையில், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய ஜோ பிடன், அதிபர் பதவிக்கு போதுமான மாநிலங்களை தாங்கள் வென்றுவிட்டதாக தெரிவித்தார். மேலும், ஜனநாயகம் இந்த தேசத்தின் இதயத்துடிப்பு என்பது மீண்டும் நிரூபிக்கப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா தொற்றை எதிர்கொண்டாலும், அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாததைவிட அதிகமான அமெரிக்கர்கள் இந்த தேர்தலில் வாக்களித்துள்ளதாகவும் ஜோ பிடன் தெரிவித்தார்.

ஜோ பிடன், ''அதிகாரத்தை நாம் வற்புறுத்தி எடுக்க முடியாது. அது மக்களிடம் இருந்து தான் வர வேண்டும். மக்கள் தான் யார் அதிபர் என்பதைத் தீர்மானிப்பார்கள். நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் எனக் கூறவில்லை. ஆனால் மொத்த வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் நாம் தான் வெற்றி பெறுவோம்'' எனத் தெரிவித்துள்ளார். ஜோ பிடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த கோரி ட்ரம்ப் தரப்பில் வழக்குப் போடப்பட்டது. மேலும் தனது மேற்பார்வையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும் அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவருமான கமலா ஹாரிஸ், ட்விட்டரில் அதிரடியான கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ''நானும் ஜோ பைடனும் தெளிவாக இருக்கிறோம். ஒவ்வொரு வாக்குகளும் எண்ணப்பட வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், `தேர்தல் முடிவுகள் விசித்திரமாக உள்ளதாக' குறிப்பிட்டுள்ளார். முதலில் பல மாகாணங்களில், தான் முன்னிலையில் இருந்ததாகவும், திடீரென எண்ணப்பட்ட வாக்குகளால் முடிவுகள் மாற தொடங்கியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.