தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் பிரபலமானவர் கங்கனா ரனாவத். தற்போது ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதும் இவர்தான். இணையத்தில் இவர் போல் ஆக்ட்டிவாக யாரையும் பார்க்க முடியாது. தினசரி டாக் ஆஃப் தி டவுனில் இருப்பது கங்கனாவின் வழக்கம். கங்கனா தற்போது விஜய் இயக்கத்தில் தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். 

இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். தலைவி படத்திற்காக தமிழில் பேசவும் பயிற்சி எடுத்துக் கொண்டார் கங்கனா. அது மட்டுமின்றி பாரதநாட்டியம் ஆடவும் கற்று கொண்ட அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் பரதநாட்டிய உடையில் எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த படம் ஓடிடி-ல் வெளியாகக்கூடும் என்று சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில், தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெளிவு படுத்தினர். 

ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்தது. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார். அவர் Blade Runner, Captain Marvel போன்ற பல படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் படத்தின் இசை பற்றி ட்விட்டர் வாசிகளுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசியவர், படத்தின் இசை அதிகம் பேசப்படும். ரெட்ரோ காலத்து இசை பயணம் செய்தால் போல் இருக்கும். இசை ஜாம்பவான் MSV அவர்களின் பாடல்கள் போல் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இப்படத்திற்காக 20 கிலோ எடையை கூட்டியுள்ளார் கங்கனா. இந்த ட்ரான்ஸ்பர்மேஷன் குறித்து ட்விட்டரில் பதிவிடுகையில், இந்திய திரையில் முதல் பெண் சூப்பர் ஹீரோவாக நான் நடித்தேன். சிறியதாகவும் அதே சமயம் வலிமையுடனும் இருக்கும் என் அரிய உடலமைப்புக்கு நன்றி. 30 வயதுக்குப் பிறகு தலைவி படத்துக்காக நான் 20 கிலோ உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருந்தது, பரதநாட்டியம் ஆட வேண்டியிருந்தது. இதனால் எனது முதுகில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடிப்பதை விட வேறெதுவும் பெரிதாகத் திருப்தியளிக்காது.

மீண்டும் பழைய நிலைக்கு என் உடலைக் கொண்டு வரும் பயணம் எளிமையாக இல்லை. நான் நன்றாக உணர்கிறேன். ஆனால், ஏழு மாத பயிற்சிக்கு பிறகும் என்னால் பழைய திடத்துக்கு, வேகத்துக்கு திரும்ப முடியவில்லை. இன்னும் 5 கிலோ இறங்க மாட்டேன் என்கிறது. சில நேரங்களில் விரக்தியாக இருக்கும். ஆனால் என் இயக்குனர் விஜய், தலைவி திரைப்பட காட்சிகளைக் காட்டும்போது எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதனுடன் தலைவி படத்திற்காக உடல் எடை கூடிய புகைப்படத்தையும் கங்கனா பதிவிட்டிருந்தார்.