ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் பாலிவுட் படம் மூலம் நடிகையானவர் சௌம்யா சேத். அதன் பிறகு அவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வந்தார். அவர் அமெரிக்க குடிமகனான அருண் கபூர் என்பவரை திருமணம் செய்தார். 

திருமணத்திற்கு பிறகு அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு அவர் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கவில்லை. அவருக்கும், அருண் கபூருக்கும் கடந்த 2019ம் ஆண்டு விவாகரத்து ஆகிவிட்டது. இதையடுத்து மகன் அய்டன் கபூருடன் தனியாக வசித்து வருகிறார்.

வாழ்க்கை, காதல் பற்றி சௌம்யா சேத் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, நான் தற்போது அமெரிக்காவில் இருக்கும் வெர்ஜினியாவில் வசித்து வருகிறேன். தாய்மையை ரசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் விவாகரத்து நடந்தது. தற்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன். 

என் குடும்பத்தார், அதிலும் குறிப்பாக என் மூன்றரை வயது மகன் என் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான் என்றார். 2017ம் ஆண்டு நான் கர்ப்பமாக இருந்தபோது தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன். நல்ல வேளை என் பெற்றோர் விர்ஜினியாவுக்கு வந்தார்கள். அவர்கள் தான் எனக்கு உதவி செய்து, தற்கொலை எண்ணத்தை மாற்றினார்கள். 

நான் கர்ப்பமாக இருந்தபோதிலும் பல நாட்களாக சாப்பிடாமல் இருந்தேன். என்னை நானே கண்ணாடியில் பார்க்க முடியவில்லை. அப்படி பார்த்தபோது, தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன். நான் இறந்துவிட்டால் என் பிள்ளைக்கு, நான் அதன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்று தெரியாமல் போய்விடும் என்று தோன்றியது. 

மேலும் இந்தியாவை மிகவும் மிஸ் செய்வதாக கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையாக இருப்பதால் தான் பயணம் செய்யாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.