தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், அதிமுக - பாஜக இடையேயான தொகுதி பங்கீடு சுமுகமாக நிறைவுபெற்றது. அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக-விற்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


மேலும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு அதிமுக முழு ஆதரவை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்டு அடம் பிடிப்பதால் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யமுடியாமல் திமுக தலைமை விழிப்பிதுங்கி நிற்கிறது.


 உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என வைகோ பகிரங்கமாக அறிவித்த நிலையில், அக்கட்சிக்கு 6 தொகுதிகள் மட்டுமே தர முடியும் என திமுக தலைமை கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறுபுறம் விடுதலை சிறுத்தைகள் கட்சி 15 தொகுதிகள் கேட்பதால் திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளை தவிர மற்ற எந்த கட்சியுடனும் கூட்டணி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் திமுக தலைமை தவித்து வருகிறது.