இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுவருகின்றன.  டெல்லி,  பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையில் பலர் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது.


இதற்கிடையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுமா என்று கேள்வி எழுந்துவந்த நிலையில், தமிழகத்துக்கு வழங்கும் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.


அதில், ‘கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இருப்பினும், விரைவில் தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவையில் அளவு 450 மெட்ரிக் டன்னை எட்டும் என்று தெரிகிறது. இது எங்களுடைய உற்பத்தி திறனான 400 மெட்ரிக் டன்னை விட அதிகம். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது கூட 58,000 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

ஆனால், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. எனவே, மேலே குறிப்பிட்டதைவிட ஆக்ஸிஜனின் தேவை அதிகரித்துள்ளது. ஆக்ஸிஜனை தடைபடாமல் கொடுப்பதற்கு தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

இந்தநிலையில், தேசிய மருத்துவ ஆக்ஸிஜன் பங்கீட்டில் தமிழகத்தில் 220 மெட்ரிக் டன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவறானது. 220 மெட்ரிக் டன்தான் தேவை என்ற தவறான கணக்கீட்டின் அடிப்படையில், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் பிற மாநிலங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்யவேண்டும்.

தமிழகத்தின் தற்போதைய தேவையே 310 மெட்ரிக் டன் என்ற அளவில் உள்ளது. எனவே, ஸ்ரீபெரும்புதூரிலிருந்து திரும்பிவிடப்படும் 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை உடனடியாக தடை செய்யவேண்டும்’ என்றுள்ளார்