தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலமாகவும்  தனது இயல்பான நடிப்பினாலும்  தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி.  கடந்த மாதம் மறைந்த இயக்குனர்  எஸ்பி.ஜனநாதனின் கடைசி திரைப்படமான லாபம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஏற்கனவே எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு என்னும் பொதுவுடமை என்ற திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார். 
 
இந்நிலையில் இன்று மே 1 உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வகையில் எஸ்பி.ஜனநாதன் அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து  இந்த தொழிலாளர் தினத்தில் அவரை நினைவு கூர்ந்து கௌரவப்படுத்தி இருக்கிறார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
 
எஸ்பி.ஜனநாதன் 2003ஆம் ஆண்டு வெளிவந்த இயற்கை திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே தேசிய விருதும் பெற்றுள்ளார். தொடர்ந்து ஈ,பேராண்மை, புறம்போக்கு என்னும் பொதுவுடமை போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ்பி.ஜனநாதன் கடைசியாக இயக்கிய படம் லாபம்.  

முன்னதாக எஸ்பி.ஜனநாதன் தஞ்சை பெரிய கோவிலையும் ராஜராஜ சோழனையும் மையப்படுத்தி ஒரு வரலாற்று சிறப்புமிக்க திரைப்படத்தை  உருவாக்குவதற்கான வேலைகளில் இருப்பதாக தகவல்கள் வெளியானது .லாபம் திரைப்படத்திற்கு பிறகு அந்த திரைப்படத்தின் பணிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது

லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். டி.இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் லாபம் திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் வெளியிடுவதற்கான கடைசி கட்ட பணிகள் நடைபெற்று  வருகிறது.  

இந்நிலையில் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பி.ஜனநாதன் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருந்தார். பிறகு மருத்துவ பலனின்றி மார்ச் 14-ஆம் நாள் அவருடைய 61 ஆவது வயதில் உயிரிழந்தார் . லாபம் திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பாக இயக்குனர் எஸ்பி.ஜனநாதன் உயிரிழந்திருப்பது தமிழ் சினிமாவில் அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
எஸ்பி.ஜனநாதன் எப்போதும் தனது திரைப்படத்தின் வாயிலாக கம்யூனிஸ கொள்கைகளையும் பகுத்தறிவு பற்றிய சிந்தனைகளையும் பேச தவறியதே இல்லை. எஸ்பி.ஜனநாதனின் ஒவ்வொரு படைப்புகளும் சரி பொது வெளியிலும் சரி எஸ்பி.ஜனநாதன்  தொழிலாளர்கள் நலன் பேசும் ஒரு கம்யூனிஸ்ட் ஆகவே வாழ்ந்திருக்கிறார்.

எனவேதான்  அப்பேர்ப்பட்ட ஒரு மனிதருக்கு இந்த உலக தொழிலாளர் தினத்தில்  விஜய்சேதுபதி மரியாதை செலுத்தி இருக்கும் விதம்  அனைவராலும் பாராட்டப் படுகிறது.