திருமணம் செய்துவைப்பதாகக் கூறி 2 லட்சம் ரூபாய்க்கு பெண் விற்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தின் டீலா மோர் பகுதியில் தான், இப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறி உள்ளது.

காசியாபாத்தின் டீலா மோர் பகுதியைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தன் கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்தார். அந்த பெண் 
கணவனைப் பிரிந்து, ஆண் துணையின்றி வசித்து வருவதை அறிந்த மற்றொரு பெண், 2 வது திருமணம் செய்துகொள்வது பற்றி ஆசை வார்த்தைகள் கூறி, அந்த பெண்ணின் மனதை மாற்றி உள்ளார்.

இதனால், 2 வது திருமணம் செய்துகொண்டால், தனக்கு ஒரு நல்ல துணை கிடைக்கும் என்றும், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் இன்னும் பாதுகாப்பான சூழல் இருக்கும் என்று நினைத்த அந்த 3 குழந்தைகளின் தாயார், 2 வது திருமணத்திற்கு அந்த பெண்ணிடம் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 3 குழந்தைகளின் தாயை அழைத்துள்ளார். அவரும், தன் 3 குழந்தைகளையும், பக்கத்து வீட்டில் வசிப்பவரின் பாதுகாப்பில் சொல்லி விட்டுவிட்டு, அந்த பெண்ணோடு சென்றுள்ளார்.

அந்த பகுதியில் உள்ள லோனி என்னும் பகுதிக்குச் சென்றதும், அங்குள்ள ஒருவரிடம் அந்த பெண்ணை ஒப்படைத்து விட்டு, அவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தைப் பற்றக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனைக் கவனித்த அந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். மேலும், பணம் கொடுத்து வாங்கியவருடன் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், அவரோ கடுமையாக மிரட்டி, அதே பகுதியில் உள்ள மற்றொரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 3 பேர் நன்றாகக் குடித்துவிட்டு ஆழ்ந்த மது போதையில் இருந்துள்ளனர். 

இதனையடுத்து, அங்கிருந்து எப்படியோ தப்பித்த அந்த பெண், தன் வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், தனக்குத் திருமண ஆசை காட்டி 2 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது குறித்து புகார் அளித்தார்.

மேலும், “அந்த பகுதியில் உள்ள ஒரு வாடகை காரில் ஏறி, எப்படியோ வீட்டிற்கு வந்து விட்டேன் என்றும், வீட்டிற்கு வந்து தான், அந்த காருக்கு பணம் கொடுத்தேன்” என்றும், அந்த பெண் கூறியுள்ளார்.

அத்துடன், “என்னை ஏமாற்றிய அந்தப் பெண் பல இடங்களில் இதே வேலையில் ஈடுபட்டு பலரையும் ஏமாற்றி வருகிறார் என்றும், இது போன்று ஏமாற்றி அழைத்து வரும் பெண்கள் மற்றும் அது தொடர்பான பணம் பெறுவது உள்ளிட்ட ஒப்பந்தங்களையும் அந்த பெண், முன்னதாகவே அந்த சமூக விரோத கும்பலிடம் பேசி முன் திட்டமிடல் பணிகளையும் மேற்கொள்கிறார்” என்றும், பகிரங்கமாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

குறிப்பாக, “நான் அந்த கும்பலிடமிருந்து தப்பித்து வீட்டிற்கு வருவதற்குள், என் பிள்ளைகளைக் காண வில்லை என்றும், என் பிள்ளைகள் 3 பேரும் அதே மோசடி பெண்ணால் கடத்தப்பட்டு இருக்கலாம்” என்றும் குற்றம்சாட்டி உள்ளார். இதனால், என் 3 பிள்ளைகளையும் கண்டுபிடித்துத் தாருங்கள் என்றும், பாதிக்கப்பட்ட பெண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசா், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த மோசடி பெண் மற்றும் மோசடி கும்பல் குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, திருமணம் செய்துவைப்பதாகக் கூறி, 2 லட்சம் ரூபாய்க்கு பெண் விற்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.