இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 22 லட்சத்தைக் கடந்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக கொரோனாவில் புதிதாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

சாமாணியர்கள் மட்டுமன்றி இந்திய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கொரோனாவின் பிடியில் இன்றைக்கு சிக்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அர்ஜுன் ராம் மேக்வால், தர்மேந்திர பிரதான், விஸ்வாஸ் சாரங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பி.ஸ்ரீராமுலு, கர்நாடக வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த பிரணாப் முகர்ஜிக்கும் இன்றைய தினம் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி பிரணாப் முகர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ``வேறு ஒரு விஷயமாக மருத்துவமனைக்குச் சென்றபோது நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆதலால், கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பல்வேறு மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு இப்போது உடலில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டவுடன், பெங்களூரில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே, கர்நாடகாவில் பருவமழை தீவிரமாகி, மாநிலத்தின் பேரழிவை ஏற்படுத்தியது. அணைகள் அனைத்தும் கரைபுரண்டு ஓடியதால், தமிழகத்தின் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டது. இன்றைக்கு கூட, குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக குடகு துணை ஆணையர் தெரிவித்துள்ளார். தொடர் மழையின் காரணமாக சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள சிரிங்கேரி, குத்ரேமுக், மங்களூர் இடையே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் குடகு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளது. 

சூழலின் தீவிரத்தை அறிந்த எடியூரப்பா, மருத்துவமனையில் இருந்தபடியே கோப்புகளைப் பாா்த்து, கையெழுத்திட்டு வருகிறார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொலைபேசியில் உரையாற்றி அரசு அலுவல் வேலைகளை கவனித்து வருகிறார். 

உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை அடுத்து, அவருக்கு இன்று இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என முடிவுகள் வந்துள்ளதாகவும், இதனால் ஓரிரு தினங்களில் எடியூரப்பா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உள்துரை அமைச்சர் அமித்ஷாவுக்கும், கொரோனா நெகடிவ் என வந்துவிட்டதாக தகவல் வந்தது. இருப்பினும், அது அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை எனக்கூறப்பட்டுவிட்டது.

விரைவில், எடியூரப்பாவை போல இன்னபிற தலைவர்களும் கொரோனாவிலிருந்து முழுவதுமாக குணமடைய, இந்தியா முழுவதும் பலரும் தங்களின் பிராத்தனைகள் வைத்து வருகின்றார்கள்