ரஷ்யாவில் மருத்துவம் படித்து வந்த சென்னை, கடலூர், சேலம், திருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் அங்குள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்த்த ராமு என்பவரின் மகன் விக்னேஷ்(வயது 23) ரஷ்ய நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் ஓல்கா ஆற்றுக்கு விக்னேஷ் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது இவர்களுடன் சென்ற நண்பர் எதிர்பாராத விதமாக நதியில் சிக்கிக் கொண்டபோது, அவரை காப்பாற்ற முயன்ற விக்னேஷ் உட்பட மேலும் மூன்று பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக மருத்துவ மாணவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'ரஷ்ய நாட்டில் உள்ள வால்கோகிராட் ஸ்டேட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.ஆஷிக், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. விக்னேஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. மனோஜ் மற்றும் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. ஸ்டீபன் ஆகிய நான்கு மாணவர்களும் 8.8.2020 அன்று ரஷ்யாவிலுள்ள வோல்கா ஆற்றில் குளித்த போது, எதிர்பாராத விதமாக சுழற்சியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் செய்தி குறித்து அறிந்தவுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு, உயிரிழந்த மாணவர்களின் உடல்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அரசு உயர் அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். எனது உத்தரவின் பேரில், தேவையான அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளையும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த தமிழ் மாணவர்களின் உடல்களை விரைந்து தாயகத்திற்குக் கொண்டு வர வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தற்போது கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், 

"ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மனோஜ், விக்னேஷ், மொஹமத் ஆஷிக், ஸ்டீஃபன் ஆகியோர் வார இறுதியை மகிழ்வுடன் கொண்டாட, அவர்களின் இதர நண்பர்களுடன் வோல்கா நதிப் பகுதிக்குச் சென்று, நதியில் குளித்து மகிழ நினைத்தனர்.

நதியில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத வெள்ளத்தால், அடித்துச் செல்லப்பட்ட இந்த இளைஞர்களில், 6 பேர் மீண்டனர். 4 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு மாணவர்களும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், எதிர்காலத்தில் மருத்துவர்களாகி, நமக்குச் சேவை செய்ய மருத்துவப் படிப்புக்காகச் சென்றவர்கள் என்பதும், இவர்களின் கனவுகளைக் காலன் பறித்துக்கொண்டதை அறிந்து, துயரமும், துக்கமும், வேதனையும் அடைந்தேன்.

கனவுகளோடு அந்நிய தேசம் பயணித்து, கல்வி அறிவைக் கற்று, சேவை செய்ய நினைத்த இந்த மாணவர்களின் மரணம், நம் அனைவருக்கும் ஈடு இணையில்லாத இழப்பாகும். மாணவர்களின் குடும்பங்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக பாஜகவின் சார்பிலும், தமிழ் நெஞ்சங்கள் சார்பிலும், எனது வேதனையையும், துக்கத்தையும் பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ் மாணவர்களின் உடலை எவ்வளவு விரைவில் தமிழகத்திற்குக் கொண்டு வர முடியுமோ, அதை விரைந்து செய்ய, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு பேசியதோடு, கோரிக்கையைக் கடிதமாகவும் அனுப்பியுள்ளேன்.

விரைவில் மாணவர்களின் உடல்கள், அவர்தம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அதற்கான தொடர் முயற்சியில் நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈடு செய்ய முடியாத இழப்பைத் தாங்கிக் கொள்ள இம்மாணவர்களின் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், சக்தியை அளிக்க எல்லாம் வல்ல இறையைப் பிரார்த்திக்கிறேன்".

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.