சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரசால்  தற்போது உலக முழுவதும் சுமார் 1.9 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.

கொரோனாவை ஒழிக்க, ஒரே சிறந்த வழி, தடுப்பூசி கண்டறியப்படுவதுதான். அதனாலேயே உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது உலகத்தின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு பல்வேறு கட்ட பரிசோதனைகளில் உள்ளன.

இந்த பரிசோதனை களத்தில், நாடுகளுக்கிடையே பலத்த போட்டிகள் நிலவி வருகின்றன. அப்படி ஒரு நாடாகத்தான் ரஷ்யாவும் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்கியது.

ரஷ்யாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவு அடைந்து  உள்ளன. இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் மிக்ஹைல் முரஸ்கோ கூறும் போது

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யப்படவுள்ளது. 2020 அக்டோபர் முதல் தடுப்பூசி மருந்துகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் மூன்றாம் கட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பரிசோதனை முயற்சிகள் மிக முக்கியம். நாங்கள் தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்துள்ளோம்என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை விரைவாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை ரஷ்யா அறிவித்ததை அடுத்து, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது. ஆனால் ரஷ்யா எதையுமே கணக்கில் கொள்ளாமல், தன் இஷ்டத்துக்கு ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

சரியான ஆய்வு முறையை மேற்கொள்ளாமல், ஆய்வை தொடர்வதென்பது ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை ஆபத்தானதாக மாற்றும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில், முதன் முதலாக, 'ஸ்புட்னிக்' செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய பெருமை, ரஷ்யாவுக்கு உள்ளது. அதுபோல, உலகில் முதன் முதலாக, கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த பெருமையைப் பெற, ரஷ்யா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், சர்வதேச அளவில், தன் மதிப்பை உயர்த்திக் கொள்ள, அந்நாடு திட்டமிட்டுள்ளது.இதையொட்டி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சில மாதங்களுக்கு முன், கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து புதிய மருந்துகளின் ஆய்வுக் காலத்தையும் குறைத்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, ரஷ்யாவின் கமலேயா ஆய்வு மையம், கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளது. இம்மையம், மனிதர்களிடம், இரு கட்டங்களாக தடுப்பூசி மருந்தை செலுத்தி சோதனை செய்ததாக தெரிவித்துள்ளது.

ஆனால் இம்மையம், மூன்றாம் கட்ட சோதனையை மேற்கொள்வதற்கு முன், கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரித்து, சந்தைப்படுத்த, ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, செப்டம்பரில் தடுப்பூசி தயாரித்து, அக்டோபரில் விற்பனைக்கு கொண்டு வர, ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

கமலேயா ஆய்வு மையம், இரு மாதங்களுக்கு முன், ஒரு டஜனுக்கு மேற்பட்டோரிடம் முதற்கட்ட பரிசோதனையை மேற்கொண்டது. அதன் முடிவையும், ஆதாரங்களையும், ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து, ரஷ்ய ஆய்வக நிறுவனங்கள் கேட்டதற்கு, தடுப்பூசி மருந்தை, தானும், சில ஆய்வாளர்களும் உடலில் செலுத்தி பரிசோதித்ததாக, ஆய்வு மையத்தின் தலைவர், அலெக்சாண்டர் கின்ட்பர்க் தெரிவித்தார்.இதை ஏற்க மறுத்த ஆய்வக நிறுவனங்கள், தரமான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என, ரஷ்ய அரசுக்கு கடிதம் எழுதின.

அதை மீறி, இரண்டாம் கட்ட ஆய்வுக்கு ரஷ்ய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, ராணுவத்தினர் உட்பட, 76 பேருக்கு, தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இதில், திரவ மருந்து செலுத்திய ராணுவத்தினருக்கு பக்க விளைவு ஏதும் ஏற்படவில்லை என்றும், திட மருந்தால் சிலர் பாதிக்கப்பட்டதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகைய சூழலில், மூன்றாம் கட்ட ஆய்வை மேற்கொள்ளாமல், தடுப்பூசி மருந்து தயாரிக்க அனுமதி அளிப்பது ஆபத்தானது என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.இது குறித்து ஜார்ஜ் டவுன் பல்கலை, சுகாதார வல்லுனர், லாரன்ஸ் கோஸ்டின் கூறியதாவது:

ரஷ்யா, விதிமுறைகளை பின்பற்றாமல், கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதால் எந்த பயனும் இருக்காது.

மாறாக, சுகாதார சீர்கேடு தான் ஏற்படும். ஆய்வு முடிவுகள் வந்த பின் தான், தடுப்பூசி மருந்தின் தன்மை தெரியும்.இவ்வாறு, அவர் கூறினார்.பிரச்சினையை உருவாக்கும் சீனாவும், ரஷ்யாவும், தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்யும் முன், அதை ஆய்வுக்கு உட்படுத்தும் என, நம்புகிறேன். ஆய்வுகளை முழுமையாக முடிக்காமல், தடுப்பூசி தயார் என அறிவித்து, விநியோகிக்க முயற்சிப்பது, பிரச்னையை தான் உருவாக்கும் என கூறியுள்ளார்.

ரஷ்யா, தடுப்பூசியில் முன்னனியில் இருப்பதாக சொல்லப்படும் பிரிட்டனின் தகவல்களை ஹேக்கர்கள் மூலம் ஹேக் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எது உண்மை, எந்த தடுப்பூசி உண்மையில் ஆபத்தற்றது மற்றும் பாதுகாப்பானது என்பதையெல்லாம் யோசித்து செயல்படும் பொறுப்பு ரஷ்ய அரசுக்கு இருக்கிறதென்பதால், அவர்கள் சூழல் அறிந்து செயல்பட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

ஆம், முதலில் தடுப்பூசியை கொண்டுவர வேண்டும் என்பதை விட, பாதுகாப்பாக தடுப்பூசியை கொண்டு வர வேண்டும் என்பதே சரியான நிலைபாடு! ரஷ்யா எப்போது இதை உணரப்போகிறதோ!?