இனி வென்டிலேட்டர் சிகிச்சைக்கு முதல் முக்கியத்துவம் இல்லை! - மத்திய அமைச்சகம்
By Nivetha | Galatta | Aug 10, 2020, 03:59 pm
இந்தியாவில் இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதில் 13 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமாகிவிட்டனர். இப்போது இருக்கும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் குறைவுதான். இந்தியாவில் நோயாளிகள் எண்ணிக்கை, 10 லட்சம் என்றிருந்த போது, அவர்களில் வெறும், 0.34% நோயாளிகளுக்கு மட்டுமே வென்டிலேட்டர் உதவி தேவைப்படும் தீவிர சிகிச்சையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. அதேபோல 1.9% பேர் ஐசியு-விலும், 2.8% பேர் ஆக்ஸிஜன் சப்போர்ட் படுக்கைகளிலும் சிகிச்சையில் இருந்ததாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்த அந்த தரவுகள், கொரோனா குறித்த அச்சத்தை தவிர்க்கும் விதமாக இருக்கிறது.
மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் குறிப்பிட்டதை போலவே, இப்பொழுதும் குறைவான சதவிகிதத்தினருக்குத்தான் ஐ.சி.யூ. உதவி தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து, கொரோனா பாதித்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு இனி முதல் வாய்ப்பாக வென்டிலேட்டர் பொருத்தப்படாது என்று தற்போது மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதுமே, நாட்டில் இருக்கும் வென்டிலேட்டர் வசதிகள் குறித்துத்தான் அலசப்பட்டது. அதற்குக் காரணம், கொரோனா பாதித்து மூச்சு விடுவதில் சிரமத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டதே காரணம்.
ஆனால் கொரோனா தொற்றுக்கு எதிரான சிகிச்சையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை முறைகளில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் கொரோனா பாதித்து மிகவும் அபாயகட்டத்துடன் குறைந்த ஆக்ஸிஜன் எடுப்புத் திறனுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அது பெரும்பாலும் பலனளிக்காது என்பதையே மருத்துவர்கள் தொடர்ந்து அறிந்துகொண்டனர்.
அதற்கு மாற்றாக மூச்சு விடுவதில் சிரமத்துடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்ஸிஜன் சேவையை தற்போது மருத்துவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
கொரோனா தொற்றுப் பரவத் தொடங்கியதுமே, நாடு முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரிக்கத் தொடங்கியது. இதற்காக மிகக் குறைந்த விலையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 18 ஆயிரம் வென்டிலேட்டர்கள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. அவற்றில் பல வென்டிலேட்டர்கள் இன்னமும் பயன்படுத்தாமலேயே உள்ளது. அதற்குள் கொரோனா பற்றிய புரிதலில் மாற்றம் ஏற்பட்டு, தற்போது கொரோனா சிகிச்சைக்கு வென்டிலேட்டர்களின் தேவையே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறையின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் தற்போதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரில் 0.3% பேருக்கு மட்டுமே வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியான ஒரு அறிக்கையில், இது இன்னமும் குறைவாக, அதாவது 0.28% என்றே இருந்தது.
வென்டிலேட்டர்கள் இல்லாமல், தீவிர சிகிச்சைப் பிரிவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை கண்டறியப்பட்டுவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதனை மேலும் உறுதி செய்யும் வகையில், மும்பையைச் சேர்ந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் கூறுகையில், நியூ யார்க்கில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கொரோனா நோயாளிகளில் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டவர்களில் 80% குணமடையவில்லை என்ற தகவல் கிடைத்திருப்பதாகவும், ஆக்ஸிஜன் சிகிச்சையே பலனளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு இப்போதுவரை நேரடி சிகிச்சை முறை இல்லை என்பதால், கூட்டு சிகிச்சை முறையே அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகை சிகிச்சையில் தீவிரமாக பாதித்தவர்களை காப்பாற்றுவதுதான் கடினமான காரியம். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் வென்டிலேட்டர் இறுதி முயற்சியாக பயன்படுத்தப்படும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். நிலைமை அப்படியிருக்க, நோயாளிகள் மத்தியில் வென்டிலேட்டர் உதவி தேவைப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக சொல்லப்படுவது, ஆரோக்கியமான விஷயம் என்றே பார்க்கப்படுகிறது. இருப்பினும் வென்டிலேட்டர் உபயோகம் குறைந்தால், இறப்பு எண்ணிக்கையும் ஆபத்தான கட்டத்தில் இருப்போர் எண்ணிக்கையும் குறையும் என்பது முழுமையான தகவல் கிடையாது. வென்டிலேட்டர் வழி சிகிச்சையின் தோல்வியைக்கூட, இந்த புள்ளிவிவரங்கள் குறிப்பிடலாம் என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது.