இந்தியாவின் கொரோனா பாதிப்பு, ஒவ்வொரு நாளும் 65,000 புதிய நோயாளிகள் என்ற அளவில் உயர்ந்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, மருத்துவத்துறையே ஆட்டம் கண்டு வருகிறது. சுகாதாரம் சார்ந்த சிக்கல்கள், நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக பொருளாதார சிக்கல் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றில், எதிர்வரும் காலத்தில் பொருளாதாரத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதற்கு, அரசு என்ன செய்யவேண்டும் என்பது பற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சில விஷயங்களை முன்வைத்துள்ளார். அதில், 3 நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த பதில்களை, அவர் இமெயில் கலந்தாடல் வழியாக மன்மோகன் சிங் சில தெரிவித்துள்ளார்.

முதலாவதாக, அரசாங்கம் ``மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்து, பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதுடன், கணிசமான நேரடி ரொக்க உதவி அளிப்பதன் மூலம் அவர்களுக்கு செலவழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும்'' என்று அவர் கூறியுள்ளார்.

இரண்டாவதாக, ``அரசின் ஆதரவுடன் கூடிய கடன் உத்தரவாத திட்டங்கள்'' மூலம் தொழில் துறைக்கு போதிய மூலதனம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

மூன்றாவதாக, ``நிறுவன தன்னாட்சி மற்றும் செயல்முறைகள்'' மூலம் நிதித் துறைக்கு பொறுப்பு அளிக்க வேண்டும்.

கொரோனா தொடக்கத்திலிருந்தே, பல அரசியல் கட்சியனரும் அரசின் சுகாதார நடவடிக்கைகளை பற்றி குறை சொல்லி வருகின்றனர். இருப்பினும் மன்மோகன் சிங், கொரோனா பிற துறைகளில், பிற விஷயங்களில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து பேசி வருகின்றார். மேலும் கொரோனா நேரத்தில் அரசு மேற்கொள்ளும் பிற விஷயங்கள், பிற முடிவுகள் குறித்தும் பேசுகிறார்.

அப்படித்தான் சீன எல்லை விவகாரத்துக்கு, மன்மோகன் சிங் கடுமையாக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், "சீனா வெட்கமின்றி சட்டவிரோதமாக இந்திய பகுதிகளான கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பங்கோங் த்சோ ஏரி போன்ற பகுதிகளில் ஏப்ரல் 2020க்கு இடையில் பல ஊடுருவல்களை மேற்கொண்டு இன்று வரை உரிமை கோர முயல்கிறது. அச்சுறுத்தல்களால் நாம் பாதிக்கப்பட மாட்டோம். நாம் பிராந்திய ஒருமைப்பாட்டுடன் சமரசம் செய்ய அனுமதிக்க முடியாது." என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அந்த அறிக்கையில், "கடந்த ஜூன் 15- 16ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நமது நாட்டின் 20 ராணுவ வீரர்களை இழந்து நிற்கிறோம். தேசத்திற்காக தங்கள் சேவையின் போது உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். தங்களுடைய கடைசி மூச்சிருக்கும் வரை தாய்நாட்டைக் காப்பதற்காகப் போராடியுள்ளனர். அவர்களின் தியாகம் வீணாக அனுமதிக்கக் கூடாது.

"இப்படியான சூழலில் நமது அரசின் முடிவுகளும், செயல்பாடுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. நமது செயல்கள் மூலமே வருங்கால சமுதாயத்தினர் நம்மை உணர்ந்து கொள்வர். ஜனநாயக நாட்டில் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டிய நிலையில் பிரதமர் இருக்கிறார். தேசத்தின் பாதுகாப்பைக் கருதி பிரதமர் பயன்படுத்தும் வார்த்தைகளையும், எடுக்கும் முடிவுகளையும் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.

தவறான அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் உண்மையை மறைக்க முடியாது. கர்னல் பி. சந்தோஷ் பாபு மற்றும் இறுதி தியாகம் செய்த நமது ராணுவ வீரர்களுக்கு நீதியை உறுதிசெய்து, நமது பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்கும் வகையில் செயல்பட , பிரதமர் மற்றும் அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். குறைவானதைச் செய்வது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குச் செய்யும் வரலாற்று துரோகமாகும் என்று கூறி உள்ளார்.

மேலும் அவர், ஒரு தேசமாக நாம் ஒன்றாக நின்று சீனாவின் வெட்கக்கேடான அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய தருணம் இது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று இந்த ஊடகத்துக்கு பொருளாதாரம் சார்ந்து அவர் பேசியிருப்பதும், அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.