தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பலர் பலியானார்கள். அந்த வெள்ளம் வடிந்து முடிந்த சமயத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் அங்கு கனமழை பொழிந்தது. 

வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக ஹைதராபாத் நகரில் 191.8 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் இந்த அளவில் ஹைதராபாத்தில் மழை பெய்யவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இந்த தொடர் கனமழையால் காரணமாக, நகரில் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுடைய நித்திய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக வீடுகளை விட்டு வெளியில் வர இயலாத நிலை தொடர்கிறது. மேலும் சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும்பணிகள் நடைபெறுகின்றன சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும்பணிகள் நடைபெறுகின்றன.

ஹைதராபாத் நகரம், இந்தாண்டில் இரண்டாவது முறையாக கடும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. ஹபீஸ் பாபா நகர், பூல்பாக், உமர் காலனி, இந்திரா நகர், சிவாஜி நகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள், வெள்ளத்தில் மிதக்கின்றன.

இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 கோடி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  இதுகுறித்து முதல்வர் பழனிசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 

``தெலங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 
மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தெலங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தெலங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலங்கானாவுக்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ் அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஹைதராபாதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 வழங்கப்படும். பலத்த மழையால் இடிந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம், பகுதியளவில் இடிந்த வீடுகளுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகை அளிக்கப்படும்.

ரூ.10,000 நிவாரணத் தொகை செவ்வாய்க்கிழமை (அக்.20) முதல் தரப்படும்.

இந்தப் பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட இடங்களுக்கு குழுக்களை அனுப்புமாறு ஹைதராபாத் மற்றும் அந்த மாவட்ட அதிகார வரம்புக்குள் வரும் ரெங்காரெட்டி, மெட்சால் மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மேற்பாா்வையிட மாநில தலைமைச் செயலா் சோமேஷ் குமாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை துரிதமாக சீரமைத்து, விரைவில் இயல்பு நிலை திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.