நாளை உருவாகிறது மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... சென்னையில் 17, 18 ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை!

நாளை உருவாகிறது மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... சென்னையில் 17, 18 ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை! - Daily news

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வெள்ளம்  சூழ்ந்து காணப்படுகிறது. 

தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் எங்கும் வெள்ளக்காடக காட்சியளிக்கிறது.  மேலும் நெல்லை மற்றும் நாகர்கோயில் பகுதிகளிலும் கனமழை காணப்படுவதால், அங்கும் மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

c1
 
அப்போது பேசிய அவர், ‘வடக்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வரும் நவம்பர் 18-ம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழகத்தை ஒட்டியுள்ள கடல் பகுதியில் நிலவக்கூடும். 

நாளைய தினம் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல்,கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம்,  கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை  பெய்ய வாய்ப்புள்ளது.
 
நாளை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்., ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

c2

புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் வரும் 17,18 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு அந்தமான் கடலோரம், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மன்னார் வளைகுடா பகுதியில் இன்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது’ என்று வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். 

Leave a Comment