அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் பதவிக்கு ஆபத்து!

அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் பதவிக்கு ஆபத்து! - Daily news

“அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ்காக புதிதாக உருவாக்கப்பட்ட இரு பதவிகளையும் ரத்து செய்யக் கோரி” சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

“அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி” சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், “அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மறைந்தார்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“அதற்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் பதவியைக் கலைத்து விட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதியதாக இரு பதவிகள் உருவாக்கப்பட்டன என்றும், அனத் படி பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கியும் அப்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்றும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன், “அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்கப் பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை” என்றும், அந்த மனுவில் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“ஆகவே, இது சம்பந்தமாகக் கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தக்களை ஏற்றுத் தேர்தல் ஆணையம் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்றும், அவர் தனது மனுவில் கோரி உள்ளார். 

“ஜெயலலிதா மரணத்தின் போது அமலில் இருந்த விதிகளைப் பின்பற்ற அதிமுக தலைமைக்கு உத்தரவிடத் தேர்தல் ஆணையத்திற்கு ஆணையிட வேண்டும்” என்று, குறிப்பிடப்பட்டு உள்ள இந்த மனுவானது, வரும் 20 ஆம் தேதி திங்கள் கிழமை அன்று, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனால், அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் பதவிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

Leave a Comment